டால்பின் ஒன்று அதன் பயிற்சியாளரைத் தாக்கும் திகிலான சம்பவத்தை விடியோவாக வெளியிடபட்டு வைரலாகி வந்த நிலையில், அதனை பீட்டா அமைப்பு ஷேர் செய்து உலகிற்கு மெசேஜ் சொல்லி உள்ளது. சனிக்கிழமையன்று நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ ட்விட்டரில் வைரல் ஆகி வருகிறது. நீரில் நீந்திக்கொண்டிருக்கும் பயிற்சியாளரை ஒரு டால்பின் முரட்டுத்தனமாக தள்ளி விடும் காட்சிகள் விடியோவில் தெரிகின்றன. அந்த பயிற்சியாளர் விலகிச் செல்ல முயற்சித்த போதும், பலமுறை அவரை கொடூரமாக தள்ளுகிறது. நியூயார்க் போஸ்ட் கூற்றுப்படி, இந்த விடியோ கிளிப் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படக் கலைஞர் ஷானன் கார்பெண்டர் என்பவரால் படமாக்கப்பட்டது. தண்ணீரில் நீந்திக் கொண்டிருக்கும் பயிற்சியாளரை நோக்கி டால்பின் குதித்து வந்து தாக்குவது வீடியோவில் தெரிகிறது. பயிற்சியாளர், மறுபுறம் நீச்சல் குளத்தின் விளிம்பிற்கு வேகமாக நீந்தி தப்பிக்க முயல்வதை காணலாம். மற்ற இரண்டு நீச்சல் வீரர்களில் ஒருவர் சர்ப்ஃ போர்டில் வந்து பயிற்சியாளரைச் காப்பாற்ற வருவதைக் காணலாம். பின்னர் தாக்கப்பட்ட அவர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.



கிடைத்துள்ள தகவல்களின் படி, பயிற்சியாளருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஒரு அறிக்கையில், பூங்கா அதிகாரிகள் கூறுகையில், 'சன்டான்ஸ்' என்று பெயரிடப்பட்ட டால்பின், பயிற்சியாளரை பயமுறுத்தி தாக்கி உள்ளது என்றும், இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் இதற்கு முன்பாக நடந்ததில்லை என்றும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.


ஆனால் அதையும் தாண்டி இந்த நிகழ்வு டால்ஃபின்களை அடைத்து வைப்பது, பயிற்சி அளித்து பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக பெர்ஃபார்ம் செய்ய வைப்பது போன்ற விஷயங்களை விமர்சனத்திற்குள்ளாக்கி உள்ளது. விலங்குகளை துன்புறுத்துவதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். டால்பின்களுக்கான இலாப நோக்கற்ற அமைப்பான டால்பின் ப்ராஜக்ட் அமைப்பு, டால்பின்கள் மற்றும் பிற திமிங்கலங்கள் சிறைப்பிக்கப்பட தகுந்தவை அல்ல என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது என்றும் கூறியது. டால்பின்களை சிறைபிடித்து வைத்திருப்பது டால்பின்களுக்கும் அவற்றின் பயிற்சியாளர்களுக்கும் அபாயங்களை ஏற்படுத்துகிறது என்றும் அந்த அறிக்கை கூறியது.






இந்த குற்றச்சாட்டுகள் எழுவது இது முதன்முறை அல்ல, ஏற்கனவே பல தன்னார்வல அமைப்புகள் இது குறித்து பேசி வருகின்றன. 57 வயதாகும் ஆர்கா திமிங்கலம் உலகிலேயே மிகச் சிறிய டாங்கில் அடைக்கப் பட்டு இருக்கிறது என்று கூறி அது எப்படி டைவ் மற்றும் நீச்சல் செய்யும் என்று கேள்வி எழுப்பி இருந்தது. அதே போல இந்த வீடியோவையும் பகிர்ந்த பீட்டா அமைப்பு, "அதனை பெர்ஃபார்ம் செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தியதன் விளைவாக அது பயிற்சியாளரை தாக்குவதை பாருங்கள்.


இதுபோன்ற நிகழ்ச்சிகளை நாங்கள் பாராட்டவில்லை, ஆனால் இது போன்ற செய்திகளை வெளியில் கொண்டு வருவதை பாராட்டுகிறோம். இது போன்று விலங்குகளை துன்புறுத்தாமல் கடல்வாழ் சரணாலயங்களுக்கு அனுப்ப வேண்டும்", என்று எழுதி இருந்தது.