குழந்தை, ஞானி, இந்த இருவரைத் தவிர
இங்கு சுகமாய் இருப்பது யார் காட்டு
இது படையப்பா பாடலில் ரஜினி பாடும் பாடலில் வரும் வரிகள்.
ஞானிகள் சுகமாக இருக்கிறார்களா என்பதும் ஞானிகள் யார் என்பது விவாதப் பொருள் என்றாலும் கூட. உண்மையில் குழந்தைகள் நிச்சயமாக உலகில் சுகமாக இருப்பவர்கள்தான். குழந்தைகளின் மனம் தான் அதற்கான திறவுகோல். குழந்தைகள் எல்லாவற்றையும் திறந்த மனதுடன் அணுகுவார்கள். ஏனென்றால் குழந்தைகளுக்கு எந்த விஷயத்தைப் பற்றியும் எந்த ஒரு தனிநபரைப் பற்றியும் முன்முடிவுகள் இருக்காது. இந்த உலகில் எல்லாமே மகிழ்ச்சிக்கான விஷயங்கள் தான் அவர்களுக்கு. அவர்களின் ஒவ்வொரு அசைவும் அழகு. அதனால் தான் இணையத்தில் குழந்தைகளின் வீடியோக்கள் அவ்வளவு பிரபலமாகி விடுகின்றனர்.
அது வெளிநாட்டில் குடுமி போட்டு சுற்றும் 3 குழந்தைகளும் அவர்களின் தந்தையும் அடங்கிய வீடியோவாக இருந்தாலும் சரி நம்மூரில் அப்ப எனக்கும் பசிக்கும்ல என்று யதார்த்தமாக பேசும் நம்மூர் சிறுவனனின் வீடியோவாக இருந்தாலும் சரி. அப்படித்தான் அண்மையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.
அந்த வீடியோவில், குழந்தை ஒன்று கையில் பொம்மையுடன் ஒரு செக்யூரிட்டியிடம் செல்கிறது. அந்த செக்யூரிட்டி கையில் காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் இருக்கிறது. அந்தக் குழந்தையானது, பிஸியாக யாரோ சிலருடன் பேசிக் கொண்டிருக்கும் அந்த செக்யூரிட்டியிடம் சென்று தனது கையை நீட்டி காய்ச்சல் பரிசோதனை செய்யச் சொல்கிறது. உடனே அந்த நபரும் பேச்சை நிறுத்திவிட்டு பொறுப்பாக அந்தக் குழந்தைக்கு இயந்திரத்தைக் கொண்டு காய்ச்சல் பரிசோதனை செய்கிறார். குழந்தை இன்னொரு கையையும் நீட்டுகிறது. அந்த காவலரும் சற்றும் சளைக்காமல் மீண்டும் பரிசோதிக்கிறார். அவருக்கு இந்த முறை கொஞ்சம் சிரிப்பும் வந்துவிடுகிறது. ஆனால் குழந்தை அவரை விடுவதாக இல்லை. ஒரு பொம்மையை நீட்டி அதற்கும் காய்ச்சல் பார்க்கச் சொல்கிறது. பிறகென்ன பொம்மைக்கும் இரண்டு முறை காய்ச்சல் பரிசோதனை செய்கிறார் அந்த செக்யூரிட்டி. இந்தச் சம்பவம் நடைபெற்ற நாடும், இடமும் தெளிவாகப் புலப்படவில்லை. ஏதோ வணிகவளாகம் போல் இருக்கிறது. ஆனால், கொரோனா பெருந்தொற்று பல செயல்களை நியூ நார்மலாக்கிவிட்டுள்ளது.
மாஸ்க் அணியாமல் நாம் வெளியே கிளம்பினால், அணிச்சையாகவே ஏதோ மறந்துவிட்டதை நம் மூளை நமக்கு நினைவூட்டுகிறது. அதேபோல், தான் கைகழுவதலும், பொது இடங்களில் காய்ச்சல் பரிசோதனை செய்துகொள்வதும் மாறியிருக்கிறது. இந்தச் செயல்களை எல்லாம் இந்தக் குட்டிக் குழந்தை தனது பெற்றோருடன் செல்லும் போது கூர்ந்து கவனித்திருக்க வேண்டும். அதனால் தான் தனியாக ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன் தானாகவே சென்று காய்ச்சல் பரிசோதனைக்கு கை நீட்டியிருக்கிறது.
எழுத்தாளர் ஞாநி ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பார், குழந்தைகள் நமக்கு கீழ்ப்படிபவர்கள் அல்ல. நம்மைப் பார்த்து அதை அப்படியே பின்பற்றி வளர்பவர்கள் என்று. அது உண்மைதான் பெற்றோர் கோவிட் பழக்கவழக்கங்களைப் பின்பற்றியதாலேயே இந்தக் குழந்தை அதை விளையாட்டாகவே உள்வாங்கியிருக்கிறது. ஆனால், நம்மில் நிறைய பேர் எதற்கு மாஸ்க், எதற்கு கை கழுவுதல் எதற்கு சோசியல் டிஸ்டன்சிங் என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த வீடியோவில் வரும் குழந்தைபோல், குழந்தை மனசுடன் இருந்தால் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை.