King Charles : இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் கடந்தாண்டு காலமானார். இதைத் தொடர்ந்து  இங்கிலாந்தின் மன்னராக  3-ம் சார்லஸ் முடிசூட்டப்பட்டார்.


ராணி 2 எலிசபெத் மறைவு


ஐக்கிய ராஜ்ஜியத்தின் மகாராணியாக சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் இரண்டாம் எலிசபெத். ஐக்கிய ராஜ்ஜியத்தை 63 ஆண்டு காலம் ஆண்டிருந்த விக்டோரியா மகாராணியின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்திருக்கிறார். இரண்டாம் எலிசபெத், 54 காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும் இருந்து உயிரிழந்தார்.


அதன் பிறகு,  ராணி 2 எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார்.  ராணி எலிசபத்தின் மறைவுக்கு பின்னர் மன்னராக சார்லஸ் அரியனை ஏறியபோது, அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா மட்டும் அதிகாரப்பூர்வமாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், மே 6ஆம் தேதி (இன்று) சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. 


விழாக்கோலத்தில் லண்டன்


அதன்படி, லண்டனில் உள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே  தேவாலயத்தில் இன்று கோலகலமாக மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி இங்கிலாந்து முழுவதும் விழாக்கோலமாக இருந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.


கடந்த 1953ஆம் ஆண்டு ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு, 70 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த பாரம்பரிய விழா நடைபெற்றது. இந்த முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, முடிசூட்டு விழாவில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். 


முடிசூட்டு விழாவிற்காக பக்கிங்காம் அரண்மனையில் இருந்து சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா பார்கர் ஆகியோர் குதிரைகள் பூட்டப்பட்ட தங்க ரதத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு வந்தனர். அப்போது, பாரம்பரிய முறைப்படி கையில் செங்கோல் ஏந்தி மன்னர் 3ஆம் சார்லஸ் மன்னருக்கான அரியணையில் அமர்ந்தார்.  இவருக்கு அருகில் ராணி கமீலா பார்கர் அமர்ந்தார். அதன்பிறகு, அனைவருக்கும் மத்தியில் உறுதிமொழி  ஏற்றுக்கொண்டார் சார்லஸ். தமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவேன் என மூன்றாம் சார்லஸ் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.


மன்னராக முடிசூடிய சார்லஸ்


மன்னருடைய முடிசூட்டு விழா ஒரு கிறிஸ்துவ முறையில் நடைபெறுவது வழக்கம். இதனால் மன்னரை வாழ்த்துவதற்காக தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பைபிள் வாசிப்பது என்பது வழக்கமானது. அதன்படி 3ம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பைபிளிலிருந்து ஒரு பகுதியை வாசித்தார். பின்னர், அரியணையில் மூன்றாம் சார்லஸ் அமரவைக்கப்பட்டு, பாரம்பரியமிக்க ஸ்பூனில் பிரத்யேக எண்ணெய் மன்னரின் தலையில் விடப்பட்டது.


பின்னர், மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பின், ’சூப்பர்டூனிக்கா’ எனப்படும் தங்க அங்கி அணிந்து, கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம் மன்னருக்கு சூட்டப்பட்டது. அதேவேளை இங்கிலாந்து ராணியாக அவரது மனைவி கமீலா பார்கருக்கும் சடங்குகள் நடத்தப்பட்டு, அவரது தலையிலும் மேரிகிரீடம் சூட்டப்பட்டது.