Donald Trump: ட்ரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக வழக்குகள்... எந்த உத்தரவுன்னு தெரியுமா.?
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற உடன், பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் ஒரு உத்தரவுக்கு எதிராக தற்போது வழக்குகள் போடப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம்(20.01.25) அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற உடனேயே, அதிரடியான பல உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அதில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை பாதிக்கும் வகையில் இருந்தது, பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்யும் உத்தரவு தான். தற்போது, இந்த உத்தரவை எதிர்த்து 22 மாநிலங்கள் வழக்கு தொடுத்துள்ளன.
ட்ரம்ப் உத்தரவால் இந்தியர்களுக்கு பாதிப்பா.?
அமெரிக்காவில் தற்போது வரை, அங்கு தற்காலிகமாக தங்கி வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு குழந்தை பிறந்தால், அவர்களுக்கு தானாகவே அமெரிக்க குடியுரிமை கிடைத்துவிடும். தாய், தந்தை அமெரிக்க குடியுரிமையை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின்படி, தாயோ அல்லது தந்தையோ அமெரிக்க குடியுரிமை பெற்றவராக இருந்தால் மட்டுமே, அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரைமை கிடைக்கும்.
அமெரிக்காவில், லட்சக்கணக்கான இந்தியர்கள், குடியுரிமை பெறாமல், வேலை தொடர்பான விசாவோ, சுற்றுலா விசாவோ வைத்துக்கொண்டு, தற்காலிகமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர். தற்போது போடப்பட்டுள்ள உத்தரவால், நிச்சயம் லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிக்புக்குள்ளாவார்கள். சில தம்பதிகள், அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காகவே தற்காலிகமாக அங்கு தங்கி குழந்தை பெற்றுக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வருடம்தோறும் அங்கு பிறக்கும் சுமார் ஒன்றரை லட்சம் இந்தியர்களின் குழந்தைகள் குடியுரிமை பெற முடியாத நிலை ஏற்படும்.
ட்ரம்ப் உத்தரவை எதிர்த்து வழக்கு
ட்ரம்ப்பின் குடியுரிமை தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அந்த உத்தரவுக்கு எதிராக குடியேற்ற வழக்கறிஞர்கள் அவர்கள் இருக்கும் பகுதிகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், ஜனநாயக கட்சியின் அதிகாரம் உள்ள 22 மாநிலங்கள், அரசியலமைப்பை ட்ரம்ப் மீறிவிட்டதாகக் கூறி வழக்குகள் தொடர்ந்துள்ளன.
இந்த வழக்குகள் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.