Cancer Vaccine Using AI: இப்படி மட்டும் நடந்துட்டா எவ்ளோ உயிர காப்பாத்தலாம்.!? ஏஐ மூலம் கேன்சர் தடுப்பூசி
இப்படி மட்டும் நடந்துட்டா எப்படி இருக்கும்னு யோசிச்சு சந்தோஷப்படுற அளவுக்கு ஒரு விஷயத்த சொல்லியிருக்காரு ஆரக்கிள் நிறுவன தலைவர். அப்படி என்ன சொல்லியிருக்கார்னு பார்க்கலாம்.

இந்த நவீன காலத்துலயும், உயிர்க்கொல்லி நோயா இருக்குற கேன்சருக்கு இன்னும் சரியான மருந்து வரல. ஆனா, எதிர்காலத்துல, ஏஐ உதவியோட, ஒவ்வொருவருக்குமான பிரத்யேக கேன்சர் தடுப்பூசிய உருவாக்கலாம்னு சொல்லியிருக்கார் ஆரக்கிள் தலைவர் லேரி எலிசன்.
"48 மணி நேரத்தில் கேன்சர் தடுப்பூசியை உருவாக்க முடியும்"
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய ஆரக்கிள் தலைவர் லேரி எலிசன், ஏஐ மூலம் ஒருவரின் உடலை சோதித்து, ஆரம்ப கட்டத்திலேயே கேன்சர் செல்கள் குறித்து கண்டறியலாம் என தெரிவித்தார். அப்படி அறிந்துகொண்டு, அதே ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அந்த நபருக்கான பிரத்யேக கேன்சர் தடுப்பூசியை உருவாக்க முடியும், இது எதிர்கால ஏஐ தொழில்நுட்பத்தின் உறுதிமொழி எனவும் லேரி கூறியுள்ளார். மேலும், இந்த தடுப்பூசியை ஒவ்வொரு நபருக்கும், அவருடைய உடல்நிலைக்கு ஏற்ப பிரத்யேகமாக உருவாக்கலாம் என்றும் தெரிவித்த அவர், அதே ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் இயங்கும் எந்திரங்களைக் கொண்டு, 48 மணி நேரத்தில் அந்த தடுப்பூசியை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் தரவு மையங்கள்
அமெரிக்காவில், ஆரக்கிள், ஓபன் ஏஐ, சாஃப்ட் பேங்க் ஆகியவை இணைந்து, பல்வேறு இடங்களில் தரவு மையங்களை அமைக்கின்றன. இதன் மூலம், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக அடுத்த 4 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட நிலையில், டெக்சாஸில் முதல் தரவு மையங்கள் கட்டுமானத்தில் உள்ளதாகவும், 5 லட்சம் சதுர அடியில் இதேபோன்ற 20 தரவு மையங்கள் கட்டப்படும் எனவும் எலிசன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டம், மின்னணு முறையில் உடல் ஆரோக்கியத்தை பகுப்பாய்வு செய்யும் செயற்கை நுண்ணறிவு தெழில்நுட்பத்திற்கு உதவியாக இருக்கும் என்றும், மருத்துவர்களுக்கு இது பெரும் உதவி புரியும் என்றும் கூறியுள்ளார்.
எப்படியோ, புற்றுநோய்க்கு தடுப்பூசி வந்துவிட்டால், உலகெங்கிலும் புற்றுநோயால் இறக்கும் ஏராளமான உயிர்களை காக்க முடியும் என்பது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்திதான்.