கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு வராமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அவரை ஏளனமாக பேசி வந்தனர். இந்த நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னே, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தன்னை ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாக, பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவு என்ன.?

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னேவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். சமீபத்திய தேர்தலில் அவர் அடைந்த வெற்றிக்காக அவரை பாராட்டியதாகவும், கனனாஸ்கிஸ்ஸில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு மக்களின் ஆழமான உறவுகளால் பிணைக்கப்பட்ட ஜனநாயக நாடுகளான இந்தியாவும் கனடாவும், புதிய வீரியத்துடனும், பரஸ்பர மரியாதையுடன் இணைந்து பணியாற்றும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜி7 உச்சிமாநாட்டில், கார்னே உடனான சந்திப்பை எதிர்நோக்கி உள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.

அழைக்கப்படாமல் இருந்த மோடி - காரணம் என்ன.?

பொதுவாக, ஜி7 மாநாடு நடக்கும்போது, அந்த மாநாட்டை தலைமையேற்று நடத்தும் நாடு, அவர்களின் நட்பு நாடுகளை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த 6 ஆண்டுகளாக, ஜி7 கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத போதிலும், பிற நாடுகளிடம் வைத்திருந்த நட்பு காரணமாக, பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வந்தார்.

ஆனால், இந்த முறை, ஜி7 உச்சிமாநாட்டை தலைமையேற்று நடத்தும் கனடா, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்காமல் இருந்து வந்தது. இதனால், பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்துவந்தன. கனடா உடனான நட்பை மோடி சிதைத்துவிட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தன.

பிரதமர் மோடி அழைக்கப்படாமல் இருந்ததற்கு காரணம், கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தான் என கூறப்படுகிறது. அவராலேயே இந்தியா-கனடா உறவுகள் பாதிக்கப்பட்டது.

கனடாவில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு ஆதரவு சீக்கியர்கள் மீது ட்ரூடோ நடவடிக்கை எடுக்காமல் இருந்தார். அதோடு, கனடாவில் வசித்த காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா உள்ளதாக ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனால் தான், இரு நாடுகளிடையேயான உறவுகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அவரது லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னே இடைக்கால பிரதமராக செயல்பட்ட நிலையில், தேர்தல் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்று, மார்க் கார்னேவே பிரதமராக பொறுப்பேற்றார்.

அவர் தற்போது, இந்தியா உடனான நட்பை புதுப்பிக்கும் வகையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜி7 உச்சிமாநாடு எப்போது நடைபெறுகிறது.?

முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே Group of Seven என்றழைக்கப்படும் ஜி7.  இதில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த நாடுகள் சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, செழிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற முக்கிய கொள்கைகளோடு தங்கள் சமூகம் இருப்பதாகக் கருதி ஒரு குழுவாக இணைந்துள்ளன.

ஆண்டுதோறும் இந்த மாநாடு 3 நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இதன் தலைவராக சுழற்சி முறையில் இருப்பர்.

இந்த வருடம் ஜி7 உச்சிமாநாடு கனடா தலைமையில், அங்குள்ள கனனாஸ்கிஸ் நகரில், வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.