Bangladesh Polls 2026: வங்கதேசத்தில் விரைவில் பொதுத்தேர்தல் நடப்பட வேண்டும் என ராணுவ தலைவர் அறிவுறுத்தியுள்ள நிலையில், முகம்மது யூனஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வங்கதேசத்தில் தேர்தல்:
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு ஏப்ரம் மாதம் நாட்டின் பொதுத்தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்ரீத் பண்டிகையை ஒட்டி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் வாக்குப்பதிவ் நடைபெறும் என உறுதியளித்தார். இதற்கான விரிவான திட்டமிடல்களை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றும் குறிப்பிட்டார்.
முகமது யூனஸ் சொன்னது என்ன?
உரையில், “அடுத்த பக்ரீத் பண்டிகைக்குள், சீர்திருத்தம் மற்றும் நீதி குறித்த ஏற்றுக்கொள்ளத்தக்க நிலையை நாம் அடைய முடியும் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணையில் அனைவரும் முன்னேற்றத்தைக் காண முடியும்” என யூனஸ் வலியுறுத்தினார்.
தேர்தல் தேதி குறித்து யூனுஸுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே தொடர்ந்து விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி வரும் பங்களாதேஷ் தேசியக் கட்சி (BNP) மற்றும் அதன் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகள், யூனுஸ் மீது அழுத்தத்தை அதிகரித்து வருகின்றன. வரும் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவ தளபதியும் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்று முக்கிய இலக்குகள்:
தொடர்ந்து பேசுகையில், "வரலாற்றில் மிகவும் சுதந்திரமான, நியாயமான, போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தியது. கூடுதலாக, நீதி, சீர்திருத்தம் மற்றும் தேர்தல்கள் தொடர்பான தற்போதைய சீர்திருத்த நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்த பிறகு, அடுத்த தேசியத் தேர்தல்கள் 2026 ஏப்ரல் முதல் பாதியில் ஒரு நாளில் நடைபெறும் என்பதை இன்று நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறேன்" என்று யூனுஸ் விளக்கினார்.
புரட்சியை தொடர்ந்து தேர்தல்:
கடந்த ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு வழிவகுத்த வன்முறை போராட்டங்களின் போது இழந்த உயிர்களைக் குறிப்பிட்டு, கிளர்ச்சியின் தியாகிகளை திருப்திப்படுத்தும் ஒரு தேர்தலை அரசாங்கம் நடத்த விரும்புவதாக யூனுஸ் தனது உரையில் கூறினார். இது மிகவும் சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற தேர்தலாக தேசத்தால் நினைவில் கொள்ளப்படட்டும் என்று வலியுறுத்தினார்.
"வங்காளதேசத்தின் சுதந்திரம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய கண்ணியம் ஆகியவற்றில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம் என்றும், நாட்டின் நலன்களை எந்த வெளிநாட்டு சக்திக்கும் விற்க மாட்டோம்" என்றும் அரசியல் கட்சிகள் உறுதியளிக்க வேண்டும் என்று அவர் குடிமக்களை வலியுறுத்தினார்.
வங்கதேசம் சப்போர்ட் யாருக்கு?
ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும், அண்டை நாடுகளின் ஆதரவு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவுடன் நெருங்கிய நட்பை பாராட்டினார். ஆனால், அவரது ஆட்சி கலைந்தபிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, சீனாவுடன் நெருக்கம் காட்டியது. இந்தியாவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தது. இதனால் இருநாடுகளின் உறவு கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில், நடைபெற உள்ள தேர்தலுக்கு பின்பு, பொறுப்பேற்க உள்ள அரசு யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. பிரதான அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் எதிரிகளாகவும், தெற்கில் உள்ள இலங்கை நம்பமுடியாத நட்பு நாடாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.