அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கனடாவும் ஒன்று. இந்நிலையில், வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டோரியோ மாகாணத்தில் சமீபத்தில் அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக ஒரு விளம்பரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த விளம்பரம் ஒளிபரப்பான விவகாரத்தில் ட்ரம்ப் கோபமடைந்த நிலையில், அதற்காக தற்போது ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளார், கனடா பிரதமர் மார்க் கார்னே. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கனடாவில் ஒளிபரப்பான சர்ச்சைக்குரிய விளம்பரம்
கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்டோரியோ மாகாணத்தின் முதல்வர் டக் ஃபோர்டு, அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக சமீபத்தில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த தொலைக்காட்சி விளம்பரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன், 1987-ம் ஆண்டு அந்நாட்டு தேசிய வானொலியில் பேசிய உரைகளிலிலிருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து, இதற்கு ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
கோபமடைந்த ட்ரம்ப்
இந்நிலையில், இந்த விளம்பரத்தால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடாவுடன் நடத்தி வந்த வர்த்தகப் பேச்சுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாக தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நிறுத்தப் போவதாக ஒன்டோரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்த விளம்பரம் குறித்து தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், கனடா, ரொனால்ட் ரீகனின் வரிகள் குறித்த உரையில் மோசடியான விளம்பரத்தை வெளியிட்டு கையும் களவுமாக பிடிபட்டது என குறிப்பிட்டிருந்தார். மேலும், ரீகன் அறக்கட்டளை, "அதிபர் ரொனால்ட் ரீகனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோவைப் பயன்படுத்தி ஒரு விளம்பர பிரசாரத்தை உருவாக்கியது. அந்த விளம்பரம் அதிபரின் வானொலி உரையை தவறாக சித்தரிக்கிறது" என்றும், "அந்தக் கருத்துக்களை பயன்படுத்தவும், திருத்தவும் அனுமதி பெறவில்லை என்றும் கூறியது. ரொனால்ட் ரீகன் ஜனாதிபதி அறக்கட்டளை மற்றும் நிறுவனம் இந்த விஷயத்தில் அதன் சட்டப்பூர்வ விருப்பங்களை மறுபரிசீலனை செய்து வருகிறது." என கூறியிருந்தார்.
அதோடு, இந்த மோசடியின் ஒரே நோக்கம், அமெரிக்காவை காயப்படுத்த பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் வரிகளில் அமெரிக்க உச்சநீதிமன்றம் தங்களை "மீட்பதற்கு" வரும் என்ற கனடாவின் நம்பிக்கையாகும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக வரிகளை ரொனால்ட் ரீகன் விரும்பினார். ஆனால், கனடா அதை விரும்பவில்லை என்று கூறியது! உண்மைகளை அவர்கள் கடுமையாக தவறாக சித்தரித்ததாலும், விரோதமான செயலாலும், கனடா மீதான வரியை அவர்கள் இப்போது செலுத்துவதை விட 10% அதிகமாக உயர்த்துகிறேன் என தெரிவித்திருந்தார்.
மன்னிப்பு கோரிய கனடா பிரதமர் மார்க் கார்னே
இந்த சூழலில், சமீபத்தில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்றபோது, அங்கு நடந்த விருந்து நிகழ்வில் கலந்துகொண்ட மார்க் கார்னே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
கனடா பிரதமர் என்ற முறையில், அமெரிக்காவுடன் நல்லுறவை பேணுவது தனது பொறுப்பு என்றும், அதனால், அதிபர் ட்ரம்ப்பிடம் மன்னிப்பு கோரியதாகவும் கனடா பிரதமர் மார்க் கார்னே தெரிவித்துள்ளார். மேலும், ஒன்டோரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டிடம், விளம்பரத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியதை ட்ரம்ப்பிடம் தெரிவித்ததாகவும், அவர் அந்த விளம்பரத்தால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தாகவும் கார்னே தெரிவித்துள்ளார்.
கார்னே மன்னிப்பு கோரிய நிலையிலும், கனடா உடனான வர்த்தகப் போச்சுவாத்தைகள் உடனடியாக தொடங்காது என்றும், கார்னேவை தனக்கு பிடித்தமானவர் என்றும், அவருடன் மிகச் சிறந்த உறவு இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.