Free Contraceptives: விரும்பிய எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்று கொள்ளவும், கர்ப்பத்தின் இடைவெளியைத் தீர்மானிக்கவும் குடும்ப கட்டுப்பாடு உதவுகிறது. இதில், கருத்தடை முறைகள் பெரும் பங்காற்றுகிறது. கருத்தடை தொடர்பான தகவல்கள், சேவைகளை பெறுவது ஒவ்வொரு தனிநபரின் அடிப்படை மனித உரிமை ஆகும்.


கருத்தடையின் நன்மைகள்:


திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தடுப்பது மகப்பேறு தொடர்பான உடல்நலக்குறைவு மற்றும் கர்ப்பம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது. இளம் வயதில் குழந்தைகளை பெற்று கொள்வதால் பல பெண்கள் உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.


இவர்களை தவிர, முதுமையான பருவத்தில் குழந்தையை பெற்று கொள்வதாலும் நிறைய சுகாதார பிரச்னைகள் ஏற்படுகிறது. இம்மாதிரியான பிரச்சினைகளை தவிர்க்க குடும்ப கட்டுப்பாடு பேருதவியாக இருக்கிறது. திட்டமிடப்படாத கர்ப்பத்தின் விகிதங்களைக் குறைப்பதன் மூலம், பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளை குறைக்கலாம். தாய்மார்களிடமிருந்து பிறந்த குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பரவுவதையும் இது குறைக்கிறது.


பெண்களின் கல்விக்கு பயன் அளிப்பதோடு, ஊதியம் பெறும் வேலைவாய்ப்பு உள்பட சமூகத்தில் பெண்கள் முழுமையாக பங்கேற்கும் வாய்ப்புகளையும் இது உருவாக்குகிறது. பொருளாதார, சமூக ரீதியாக பின்தங்கிய பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகள்/ உபகரணங்களை இலவசமாக வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


கனடா அதிரடி அறிவிப்பு:


இந்த நிலையில், கனடா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து பெண்களுக்கும் கருத்தடை மாத்திரைகள்/ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "பெண்கள் தங்களுக்குத் தேவையான கருத்தடை சாதனங்களைச் செலவில்லாமல் தேர்வு செய்ய சுதந்திரம் இருக்க வேண்டும். எனவே, கருத்தடை மருந்துகளை இலவசமாக வழங்க உள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து டொராண்டோ நகரில் பேசிய கனட நாட்டு துணை பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், "9 மில்லியன் இனப்பெருக்க வயதுடைய கனட பெண்களுக்கு IUD (கருத்தடை சாதனம்), கருத்தடை மாத்திரை போன்ற கர்ப்பத்தைத் தவிர்க்க மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் முறைகளுக்கு அரசாங்கம் பணம் செலுத்தும்" என்றார்.


 






கனடா அரசின் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் பட்சத்தில், அந்நாட்டின் மிகப்பெரிய சுகாதார திட்டமாக இலவச கருத்தடை உபகரணங்கள் திட்டம் அமையும். ஜப்பான், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளை காட்டிலும் கனடாவில் மருந்துகளுக்காக தனிநபர் அதிகமாக செலவிடுகின்றனர். இந்த திட்டத்திற்கு கனடா மாகாணங்களின் ஒப்புதல் தேவை. ஏன் என்றால், பொது சுகாதாரம் என்பது மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.