கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தியா கருத்து தெரிவித்தமைக்கு எதிர் கருத்து தெரிவித்துள்ளது கனடா அரசாங்கம். இந்நிலையில் இருநாட்டு வெளியுறவுத் துறையினர் ஒருவருக்கொருவர் எதிர்கருத்து தெரிவித்து வருவது, அயல்நாட்டு உறவில் விரிசலானது தொடர்ந்து அதிகமாகி கொண்டே இருப்பதை உணர முடிகிறது.
நிஜ்ஜார் கொலை வழக்கு:
பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் என்ற தனி பகுதி கோரும் அமைப்புகளில் முக்கிய தலைவராக ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இருந்து வந்தார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 1997 இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். இவரை இந்திய இந்திய அரசாங்கம் பயங்கரவாதியாக அறிவித்தது. இவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் முகமூடி அணிந்த இருவர் சுட்டுக் கொன்றனர். இச்சம்பவம் நடைபெற்றதையடுத்து, இதில் இந்தியாவின் தலையீடு இருப்பதாக கனடா சுட்டிக்காட்டியது. இந்தக் குற்றச்சாட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
3 பேர் கைது:
இந்நிலையில், கனடாவில் கடந்த வாரம், நிஜ்ஜாரைக் கொன்ற கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறி மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அந்த மூவரும் கரண் பிரார், கரண் ப்ரீத் சிங் மற்றும் கமல் ப்ரீத் சிங் என அடையாளம் காணப்பட்டனர். நிஜ்ஜார் ஒரு கனடா குடிமகன் என்றும், கொலையில் எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தின் தொடர்பும் எளிதாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்றும் கனடா அமைச்சர் மில்லர் தெரிவித்தார்.
இந்தியா கருத்து:
கைது சம்பவம் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, காவல்துறை விசாரணையில் யாரையாவது கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் திட்டமிட்டு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், கனடா நாட்டுக்கு வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கனடா நாட்டு விசா எளிதாக வழங்கப்படுகிறது. பொய்யான ஆவணங்களுடன் வருபவர்களை கனடா அரசாங்கம் ஆதரிக்கிறது எனவும் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சனம் வைத்திருந்தார்.
மேலும், கனடா அரசாங்த்துடன் பிரச்னை இருக்கிறது என வெளிப்படையாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது பேசு பொருளானது.
கனடா கருத்து:
ஜெய்சங்கரின் கருத்துக்கு பதிலளித்த கனடா அமைச்சர் மில்லர், குடியேற்றக் கொள்கைகளில் நாங்கள் எளிதாக இருக்கவில்லை. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கருத்து கூற உரிமை உண்டு. அவரது கருத்தை பேச அனுமதிப்போம். ஆனால் இப்போது பேசியிருப்பது உண்மையில்லை. இதுபோன்ற எந்த அறிக்கையையும் நாங்கள் எளிதாக எடுத்து கொள்ள மாட்டோம். ஒருவர் மாணவர் விசாவை பயன்படுத்தி கனடாவிற்கு வருகிறார் என்றால், முழுமையான பின்னணி சோதனை நடைபெறுகிறது என்றார்.
இந்நிலையில் இந்தியா-கனடா நாடுகளுக்கிடையிலான விரிசலானது தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருவதை பார்க்க முடிகிறது.