உடலுறவின் போது அனுமதியின்றி ஆணுறையை அகற்றுவதை குற்றம் என அறிவிக்கும் புதிய சட்டத்திருத்தம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொண்டு வரப்பட உள்ளது. அதுபோன்ற செயலில் ஈடுபட்டு, துணை புகார் செய்தால் பாலியல் பலாத்காரத்துக்கு இணையாக குற்றம் என கருத இச்சட்டம் வகை செய்கிறது.
ஆணுறை அணிந்துகொண்டு உடலுறவில் ஈடுபடும்போது துணையின் அனுமதிபெறாமல் அதை அகற்றுவதை STEALTHING என அழைக்கப்படுகிறது. ஆண்கள் STEALTHING இல் அதிகம் ஈடுபடுவதால் இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும் என பெண்ணிய அமைப்புகள் குரல் எழுப்பினர். அதன் படி புதிய சட்டத் திருத்தத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண அரசு ஈடுபட்டு இருந்தது. அது முழுவடிவம் பெற்று செவ்வாய்க்கிழமை கலிபோர்னியா சட்டமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
AB 453 என்ற இந்த புதிய சட்ட மசோதாவுக்கு கலிபோர்னியா ஆளுநர் ஒப்புதல் அளித்தால், இது முழுமையான சட்ட வடிவம் பெறும். அதுமட்டுமின்றி அமெரிக்காவிலேயே STEALTHING இற்கு எதிராக சட்டம் கொண்டு வரும் முதல் மாகாணம் கலிபோர்னியா தான். இச்சட்டத்தின் கீழ் ஆணுறையை துணை ஒருவர் அகற்றினால் அது சட்டப்படி குற்றமாக கருதப்படும். இது குறித்து துணை புகார் அளிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர் மீது உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் சேதங்களை ஏற்படுத்தியதாகவும் வழக்கு தொடர்ந்து இழப்பீடு கேட்க முடியும்.
துணையின் ஒப்புதல் இன்றி ஆணுறையை அகற்றும் செயலை சட்ட ரீதியாகத் தடுக்க 2017-ம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர், ஜனநாயகக் கட்சியின் அவை உறுப்பினரான கிறிஸ்டினா கார்சியா. இவர் கூறுகையில், ”உடலுறவின்போது துணைக்கு தெரியாமல் எப்படி ஆணுறையை அகற்றுவது என்பது குறித்த யோசனைகளை பல வெளிப்படையாக தெரிவித்து வந்ததை பார்த்தவுடன் எனக்கு வெறுப்பை ஏற்பட்டது. துணையின் அனுமதி இன்றி, ஆணுறையை அகற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இதை தடுக்க இதுவரை சட்டத்தில் இடம் இல்லாமல் இருந்தது. இத்தகையச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது தண்டனை பெற்றுத் தரும் வரை ஓய மாட்டேன்.” என்றார்.
இது தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் செக்ஷுவல் ஹெல்த் செண்டர் நடத்திய ஆய்வில், 34 சதவீதம் பெண்களும், 20 சதவீதம் ஆண்களும் உடலுறவின் போது தங்கள் துணையால் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். குறிப்பாக இதிலும் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை பாலின உரிமை மீறலாகவும், பாலியல் பலாத்காரமாகவுமே பார்க்க வேண்டும் என பல நாடுகளை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இதனை குற்றமாக அறிவிக்கும் சட்டத்தை கொண்டு வந்து உள்ளது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம்.