இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மகன் இளவரசர் ஆண்ட்ரூ தாய்லாந்தின் சிவப்பு விளக்குப் பகுதிகளில் உள்ள பாலியல் விடுதிகளில் சிறார் பாலியல் வழக்கின் குற்றவாளியான மறைந்த ஜெஃப்ரீ எப்ஸ்டீனுடன் சுற்றுலா சென்ற படங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.


தாய்லாந்து நாட்டின் புகெட் பகுதியில் உள்ள கடலோர ரிசார்ட் ஒன்றில் மேலாடை அணியாத சூப்பர்மாடல்களுடன் இளவரசர் ஆண்ட்ரூ விளையாடிக் கொண்டிருக்கும் இந்தப் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த சுற்றுலாவில் இங்கிலாந்து இளவரசருடன் சிறார்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவரும், மறைந்த செல்வந்தருமான ஜெஃப்ரீ எப்ஸ்டீன் உடன் இருந்துள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. 


பிரிட்டிஷ் இளவரசர் தங்களின் பாலியல் விடுதிக்கு வந்து அதனைச் சிறப்பித்துள்ளதாக அந்த ரிசார்ட்டின் மேலாளரும் பேட்டியளித்து இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்துள்ளார். 



கடந்த 2001ஆம் ஆண்டு, விர்ஜினா குய்ஃப்ரேவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த சுற்றுலா நிகழ்ந்துள்ளது. எனினும், இளவரசர் ஆண்ட்ரூ இதனை மறுத்துள்ளதோடு, அவருக்கும் ஜெஃப்ரீ எப்ஸ்டீனுக்கு இடையிலான உறவில் சட்டவிரோத நடவடிக்கைகள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை எனக் கூறியுள்ளார். 


ஜெஃப்ரீ எப்ஸ்டீன் தம்பதியினருடன் இளவரசர் ஆண்ட்ரூ தங்கிய தனியார் விடுதியின் ஒரு இரவுக்கான கட்டணம் சுமார் 4 ஆயிரம் பவுண்ட்களாகும். இதன் இந்திய மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபாய் ஆகும். இந்த விடுதி உலகின் மிகப்பெரிய விஐபிகள் அடிக்கடி சுற்றுலாவுக்காக வரும் இடம் என புகெட் பகுதியைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 


பகல்களில் படகுகள் முழுவதும் பெண்களோடு சுற்றுலா கொண்டாடிய இளவரசர் ஆண்ட்ரூ, இரவுகளின் போது பாலியல் சுற்றுலா நிகழ்த்தப்படும் படோங் பகுதிக்கு ஜெஃப்ரீ எப்ஸ்டீனுடன் சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், இருவரும் `பனானா டிஸ்கோ’ என்ற நிர்வாண கிளப்புக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அடுத்ததாக இருவரும் `க்ரேஸி கேர்ள்ஸ் பை ராக் ஹார்ட்’ என்ற மதுபான விடுதிக்குச் சென்றுள்ளனர். இந்த விடுதியில் பணியாற்றும் பெரும்பாலான பெண்கள் பாலியல் தொழிலாளர்கள் எனக் கூறப்படுகிறது. 


இந்த விவகாரம் குறித்து விடுதியின் மேலாளர் கூறும் போது, `இளவரசர் இங்கு வந்ததைக் கண்டு நான் ஆச்சர்யம் கொண்டேன். எனினும், அவர் யார் என்று பிறருக்குத் தெரியும் வரை, அவர் இயல்பாகவே இருந்தார். அவரிடம் அவர் தான் இளவரசரா என்று கேட்டேன். அவரும் `ஆம்’ என்று சொன்னார். அவருடன் நான்கு நண்பர்கள், ஒரு பாதுகாவலர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் வோட்கா ஆர்டர் செய்தனர். ஒரு பெண் அவரிடம் சென்று பேசினார்; எனினும் இளவரசர் அந்தப் பெண்ணிடம் பெரிதாக பேசிக் கொள்ளவில்லை’ எனக் கூறியுள்ளார். 


தனது மகன் இளவரசர் ஆண்ட்ரூ மீதான தொடர்ச்சியான பாலியல் புகார்கள் காரணமாக பிரிட்டிஷ் ராணி எலிசபெத் அவரின் பட்டங்கள் அனைத்தையும் கடந்த வாரம் பறித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.