நியூசிலாந்து நாட்டில் கடலில் சென்ற படகு திமிங்கலம் போன்ற பொருள் ஒன்றின் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
நியூசிலாந்து நாட்டில் கைகவுரா, கூஸ் பே பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இப்பகுதியில் நேற்று (செப்.10) நியூசிலாந்து நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பறவை ஆர்வலர்கள் 11 பேர் சிறிய ரக படகு ஒன்றை ஏற்பாடு செய்து கடலில் பயணித்துள்ளனர்.
8.5 மீட்டர் (அ) 28 அடி நீளம் கொண்ட படகில் இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், படகு திடீரென கடலில் நீந்திக்கொண்டிருந்த திமிங்கலம் மீது மோதியதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதில், படகு நிலைகுலைந்து கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த 11 பேரும் கடலில் மூழ்கி தத்தளித்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கடலோர காவல்படையினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கடலில் தத்தளித்தவர்களில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் மீட்புப்படையினர் வருவதற்குள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் ஐந்து பேரும் அந்நாட்டின் பிரபல் புகைப்பட சமூகம் ஒன்றைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நிலையில், முன்னதாக அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
திமிங்கலம் மீது மோதி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் நிலையில் விபத்துக்கு திமிங்கலம் மோதியது தான் காரணமா அல்லது திமிங்கலத்தைப் பார்க்க மக்கள் ஒருபுறம் விரைந்ததால் படகு நிலைதடுமாறி மூழ்கியிருக்குமா என்ற கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.