உலகம் முழுவதும் போதை பொருள் பயன்பாடு என்பது மிக பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. அதை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்சூழலில், அமெரிக்காவின் போதை பொருள் கொள்கையை மாற்றியமைக்கும் நோக்கில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில், கூட்டாட்சி சட்டத்தின் கீழ் வெறுமனே மரிஜுவானா (போதை பொருள்) வைத்திருந்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் பைடன். போதை பொருள் வகைப்படுத்தும் முறையை மறு ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அன்று இதுகுறித்து விரிவாக பேசிய பைடன், "கூட்டாட்சி சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு, வீட்டு வசதி அல்லது கல்வி வாய்ப்பு மறுக்கப்படலாம். இம்மாதிரியான பின் விளைவுகள் என்னுடைய இந்த நடவடிக்கையாலிருந்து விடுபட உதவும்" என்றார்.
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 40 மாகாணங்களில் ஏதோ ஒரு வழியில் மரிஜுவானா பயன்பாடு சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், சில மாகாணங்களிலும் கூட்டாட்சி சட்டத்தின் கீழும் இது முற்றிலுமாக சட்ட விரோத செயலாக உள்ளது. மறுவகைப்படுத்துவது என்பது போதை பொருளை முற்றிலுமாக சட்டப்பூர்வமாக்க முதல் படியாகும்.
இந்த நடவடிக்கை பெரும்பான்மையான அமெரிக்கர்களால் ஆதரிக்கப்படுகிறது. நிறுவனங்கள், சட்ட அமலாக்கத்துறை, லட்சக்கணக்கான மக்கள் மீது இது பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
அதிபரின் இந்த முடிவு அவரது தேர்தல் வாக்குறுதியை பூர்த்தி செய்து, நவம்பர் மாதம் நடைபெற உள்ள இடைக்கால தேர்தலுக்கு முன்பாக அவரது இடதுசாரி வாக்காளர்களை மகிழ்விக்க உதவும். செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டை தக்க வைக்க அக்கட்சி தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
"மரிஜுவானா மீதான நமது தோல்வியுற்ற அணுகுமுறையால் பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த தவறுகளை சரி செய்ய வேண்டிய நேரம் இது. அனைத்து மாகாண ஆளுநர்களும் இந்த நடவடிக்கையை பின் தொடர வேண்டும். மரிஜுவானா வைத்திருப்பதால் மட்டுமே யாரும் மத்திய சிறையில் இருக்கக் கூடாது என்பது போல, அந்த காரணத்திற்காக யாரும் உள்ளூர் சிறையிலோ அல்லது மாநில சிறையிலோ இருக்கக்கூடாது" என பைடன் தெரிவித்துள்ளார்.
பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் மத்திய அரசினால் தண்டனை பெற்ற 6500க்கும் மேற்பட்டோர் மாற்றங்களை சந்திக்க நேரிடும் என பைடன் அரசாங்கத்தின் மூத்த அலுவலர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை பைதன் வெளியிட்டதை தொடர்ந்து, கஞ்சா உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பங்குகள் ஏற்றத்தை கண்டுள்ளன.
டில்ரே பிராண்ட்ஸ் (TLRY.O), கேனோபி க்ரோத் (WEED.TO) ஆகியவற்றின் பங்குகள் 20% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. அமெரிக்க நீதித்துறை அமைப்பில் நிலவும் இன ஏற்றத்தாழ்வுகளில் இந்த நடவடிக்கையால் ஏற்பட உள்ள தாக்கத்தை பைடன் ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர்.