ரஷிய அதிபர் புதினை பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மாஸ்கோவில் சந்தித்து பேசினார். இந்த ரகசிய சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், சந்திப்பை தொடர்ந்து அலெக்சாண்டர் லுகாஷென்கோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.


ஆபத்தான நிலையில் பெலாரஸ் அதிபர்:


மாஸ்கோவில் உள்ள மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அலெக்சாண்டர் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 


கடந்த 2020ஆம் ஆண்டு, பெலாரஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வலேரி செப்கலோ, அலெக்சாண்டர் உடல்நிலை குறித்து கடந்த சனிக்கிழமை வெளியிட்ட தகவலில், "ஆபத்தான நிலையில் உள்ளார். மேலும், தகவல்கள் தேவைப்படுகிறது. எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.


எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, மூடிய கதவுகளுக்குப் பின்னால் புத்தினுடனான சந்திப்புக்குப் பிறகு, லுகாஷென்கோ அவசரமாக மாஸ்கோவின் மத்திய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது, அங்குதான் அவர் உள்ளார். 


ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்களால் மதிப்பிடப்பட்ட நிலையில் இருந்து, அவரின் (லுகாஷென்கோ) உயிரை காப்பாற்ற சிறந்த நிபுணர்கள் அனுப்பப்பட்டனர். 


அதிபருக்கு விஷம் அளித்ததா ரஷியா?


அவருக்கு ரஷியா விஷம் அளித்ததாக ஊகங்கள் வெளியான வண்ணம் உள்ளது. எனவே, அதில் இருந்து திசை திருப்ப அவரை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலை தேறிய பின், மீண்டும் அவர் ஆபத்தான நிலைக்கு செல்லலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த 9ஆம் தேதி, மாஸ்கோவின் சிவப்பு சதுக்கத்தில் நடைபெற்ற வெற்றி நாள் கொண்டாட்டத்தில் லுகாஷென்கோ கலந்து கொண்டதில் இருந்து அவரின் உடல் நிலை குறித்து பல்வேறு விதமான வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், அனைத்து விதமான வதந்திகளுக்கும் மறுப்பு தெரிவித்த லுகாஷென்கோ, "நான் சாவப்போவதில்லை" என கூறியிருந்தார்.


கடந்த 1994ஆம் ஆண்டு முதல், பெலாரஸ் அதிபராக லுகாஷென்கோ பதவி வகித்து வருகிறார். லுகாஷென்கோ அரசுடன் ரஷியா கடந்த வாரம்தான் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. பெலாரஸில் அணு ஏவுகணைகளை நிலைநிறுத்த இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் ஒப்பந்தம் மேற்கொண்டனர்.


பெலாரஸில் சிறப்பு வசதிகள் கொண்ட பகுதி ஒன்றில் ரஷிய அணு ஆயுதங்களை சேமித்த வைக்க இருநாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டது. சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒப்பந்தம் மேற்கொண்டதாக இருநாடுகள் விளக்கம் அளித்தன. கடந்த ஓராண்டு காலத்திற்கு மேலாக, உக்ரைன், ரஷியா நாடுகளுக்கிடையே போர் நடந்து வருகிறது.


இதனால், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பெலாரஸ் அதிபருக்கு ரஷியா விஷம் அளித்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.