அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கஞ்சா சட்டபூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவிலோ அது தடைசெய்யப்பட்ட போதைப்பொருளாகக் கருதப்படுகிறது. 


கஞ்சா பயன்பாட்டுக்கு தடை:


நெதர்லாந்தை பொறுத்தவரையில், தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரெட்லைட் மாவட்டத்தில் கஞ்சா பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பொது இடங்களில் கஞ்சா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நகரில் உள்ள பொது இடங்களில்  கஞ்சா பயன்படுத்த அனுமதிக்கப்படாது. ஆனால், கஞ்சா காபி கடைகளில் கஞ்சாவை பயன்படுத்தி கொள்ளலாம்.


அணை சதுக்கம், டம்ராக், நியூவென்மார்க் மற்றும் ரெட் லைட் மாவட்டத்திற்கு இந்த தடை பொருந்தும். ரெட் லைட் மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 18 மில்லியன் பேர் செல்கிறார்கள். அதில், கஞ்சாவை பயன்படுத்தும் பெரும்பாலானோர் மோசமாக நடந்து கொள்வதாக நகரில் வசிப்பவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.


இச்சூழலில், கஞ்சா பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, இந்தப் பகுதிகளில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். எச்சரிக்கையை மீறியும் புகை பிடித்தால், அவர்களுக்கு 100 யூரோ அபராதம் விதிக்கப்படும்.


தொடர் புகாரை தொடர்ந்து நடவடிக்கை:


பிப்ரவரியில், ஆம்ஸ்டர்டாம் மாநகராட்சி, நகரின் சில பகுதிகளில் கஞ்சா பயன்பாட்டை கட்டுப்படுத்தும் திட்டங்களை அறிவித்தது. புதிய விதிகள் உள்ளூர் மக்களுக்கு பொருந்தும் என்றாலும், மோசமாக நடந்து கொள்ளும் சுற்றுலாப் பயணிகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதே தற்போது கொண்டு வந்துள்ள விதியின் முக்கிய நோக்கம்.


பல ஆண்டுகளாக, கஞ்சா மற்றும் பிற போதை பொருள் மீதான ஆம்ஸ்டர்டாமின் தாராளமயக் கொள்கை, நகரத்தின் பல சுற்றுப்புறங்களை விரும்பத்தகாததாக மாற்றியது. கஞ்சாவை உட்கொள்ளும் சுற்றுலா பயணிகள், அங்கு வசிக்கும் மக்களுக்கு தொந்தரவு தருவதாக புகார் அளிக்கப்பட்டு வந்தது. தற்போதைய நிலவரப்படி, காபி கடைகளுக்கு கஞ்சா தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.


மிகப்பெரிய பாதிப்பு:


கஞ்சாவில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளதால், அதை மருந்தாகப் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என இந்தியாவில் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தடை செய்யப்பட்டிருக்கும்போதே இளைஞர்கள் அதைப் போதைப் பொருளாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இதை காரணம் காட்டி அனுமதி வழங்க இந்திய அரசு தயங்கி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு, கஞ்சாவை மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு ஒப்புதல் அளித்தது.


கஞ்சா பழக்கத்தை பொறுத்தவரையில் வளர் இளம் பருவம், மாணவர்கள் பருவம் ஆகிய பருவத்தில்தான் தொடங்குகிறது. இவர்கள் முதலில் பரீட்சார்த்த முறையில் இந்த பழக்கத்தை தொடங்குகிறார்கள். இதை சிறுவயதிலேயே கட்டுப்படுத்தவில்லை என்றால், மிக பெரிய பாதிப்பை உண்டாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.