Obama Biden: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து பைடன் விலக வேண்டும் என, குடியரசு கட்சியை சார்ந்த பல மூத்த தலைவர்களும் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.
பைடனுக்கு வலுக்கும் எதிர்ப்பு:
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபரான ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் போட்டியிடுகின்றனர். இதனிடையே, வயது மூப்பால் பைடன் நியாபக மறதி போன்ற பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக, ஜோ பைடனுக்கு இரண்டாவது முறையாக பணியாற்றுவதற்கான மனக் கூர்மை மற்றும் உடல் தகுதி இல்லை என்று, சில ஜனநாயகக் கட்சியினர், ஆய்வாளர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் வலுவான கருத்து நிலவுகிறது. கடந்த மாதம் பைடன் மற்றும் டிரம்பிற்கு இடையே நடைபெற்ற விவாதம், ஜனநாயக கட்சிக்கு எதிராக முடிய பைடன் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் வலுவடைந்துள்ளது.
பைடன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஒபாமா
ஜனநாயக கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் ஏற்கனவே பைடனுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இந்த சூழலில் அந்த கட்சியின் மூத்த தலைவரும், தொடர்ந்து இரண்டு முறை அதிபருமாக இருந்தவருமான ஒபாமாவும், பைடனுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், “ஜோ பைடனின் வெற்றிக்கான பாதை வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும், அமெரிக்க அதிபர் தனது வேட்புமனுவின் நம்பகத்தன்மையை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்றும்” தனது கூட்டாளிகளிடம் ஒபாமாக கூறியதாக குறிப்பிட்டுள்ளது. அவர் அதிபராக இருந்த 8 ஆண்டுகளும், பைடன் துணை அதிபராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயக கட்சியின் திட்டம்:
ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவது ஜனநாயகக் கட்சியினர் இடையே வெற்றி தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறுதேர்தல் முயற்சியை மறுபரிசீலனை செய்ய ஒரு புதிய உந்துதலை ஏற்படுத்த, தரவுகளையும் மற்றும் வெளிப்படையான கருத்து பரிமாற்றங்களையும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ஜனநாயக கட்சியில் தற்போதும் செல்வாக்கு மிக்க நபராக உள்ள ஒபாமாவே, பைடனுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
பைடனுக்கு கொரோனா தொற்று:
பைடன் மற்றும் டிரம்ப் இடையே கடும் போட்டி இருக்கும் என ஆரம்பகட்ட கருத்து கணிப்புகள் கூறின. ஆனால், பைடன் தடுமாறி பேசுவது போன்ற வயது மூப்பு பிரச்னைகள் தற்போது அவருக்கு எதிராக மாறியுள்ளன. மேலும், டிரம்பின் மீதான துப்பாக்கிச் சூடு தாக்குதல், அவருக்கும் ஆதரவான கள அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தேர்தல் முடிவுகள் டிரம்பிற்கு சாதகமாக அமையலாம் என கருதப்படுகிறது. இதன் காரணமாகவே பைடனை விலகச் செய்துவிட்டு, துணை அதிபரான கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக களமிறக்க ஜனநாயக கட்சி திட்டமிட்டு வருகிறது. இந்த சூழலில் தான் அண்மையில், பைடனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.