Bangladesh protest: வங்கதேசத்தில் கலவரம் வெடித்துள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.


கண்டதும் சுட உத்தரவு:


வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறைக்கு மத்தியில் குறைந்தது 115 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அதிகரித்து வரும் பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை காலை வரை கடுமையான நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி யாரேனும் பொதுவெளியில் நடமாடினால் அவர்களை கண்டதும் சுட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்தியர்களின் நிலை என்ன?


வங்கதேசத்தில் நடந்த வன்முறை போராட்டங்களை அந்நாட்டின் "உள்விவகாரம்" என்று இந்தியா விவரித்துள்ளது.  ஆனால் 15,000 இந்தியர்கள் அங்கு வசிக்கும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், 8,500 மாணவர்கள் உட்பட 15,000 இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து 88 இந்தியர்கள் மேகாலயா வழியாக திரும்பினர். வெள்ளிக்கிழமை, இந்தியர்கள் மற்றும் நேபாளர்கள் உட்பட 363 பேர் மேகாலயாவின் டாவ்கி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக திரும்பினர். இதுவரை ஆயிரம் மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும், 4 ஆயிரம் பேருக்கு தேவையான உதவிகளை செய்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வன்முறைக்கான காரணம் என்ன?


1971 இல் வங்கதேச சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் உறவினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவிகிதம் வரை ஒதுக்கப்பட்ட, இடஒதுக்கீடு முறையை நிறுத்தக் கோரி மாணவர் குழுக்களால் தொடங்கப்பட்ட போராட்டம் தற்போது வன்முறையாக உருவெடுத்துள்ளது. கடந்த 2009 முதல் ஆட்சியில் இருக்கும் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்திற்கு, இது போராட்டம் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அங்கு நடந்த மிகப்பெரிய மக்கள் புரட்சியாக இது பார்க்கப்படுகிறது.


வங்கதேசத்தில் தற்போது நிலவும் சூழல்:



  • டாக்கா மற்றும் பிற நகரங்களில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் காவல்துறையினரும் எதிர்ப்பாளர்களும் மோதிக்கொண்டதை அடுத்து வன்முறையை அடக்குவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

  • இந்திய ரயில்வே சனிக்கிழமையன்று கொல்கத்தா-டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ் மற்றும் ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா மற்றும் குல்னா இடையே பந்தன் எக்ஸ்பிரஸ் உட்பட வங்காளதேசத்திற்கு இரண்டு ரயில்களையும் ரத்து செய்தது.



  • ஜூலை 19, இதுவரை நடந்த போராட்டங்களில் மிகக் கொடிய நாள் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் 43 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது.

  • இணையம் மற்றும் மொபைல் சேவைகள் தடைசெய்யப்பட்டதன் மூலம் ஆன்லைன் தகவல்தொடர்புகள் வியாழக்கிழமை முதல் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன. பல்வேறு தொலைக்காட்சி செய்தி சேனல்களும் ஒளிபரப்பாகவில்லை.

  • பெரும்பாலான உள்ளூர் செய்தித்தாள்களின் வலைத்தளங்களும் மூடப்பட்டன. 

  • வங்கதேச மத்திய வங்கி மற்றும் PMO இன் இணையதளமும் ஹேக் செய்யப்பட்டு சிதைக்கப்பட்டன.

  • எதிர்ப்பாளர்கள் சிறைச்சாலை வளாகத்தையும் தாக்கி, ஜூலை 19 அன்று தீ வைத்து எரித்தனர், நர்சிங்டியில் சுமார் 800 கைதிகள் தப்பியோடினர்.

  • கோட்டா அமைப்பு பாரபட்சமானது என்றும், பிரதமர் ஹசீனாவின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது என்றும், அவரது கட்சி சுதந்திர இயக்கத்தை வழிநடத்தியது என்றும் போராட்ட மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். அவர்கள் தகுதி அடிப்படையிலான முறையைக் கோருகின்றனர்.

  • போர் வீரர்கள் எந்த அரசியல் சார்பற்றவராக இருந்தாலும் அவர்களின் பங்களிப்புக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று ஹசீனா இடஒதுக்கீடு முறையை ஆதரிக்கிறார்.