வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர் அன்வாருல் ஆசிம் அனார் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் இந்தியாவில் நடந்திருப்பது உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவ சிகிச்சைக்காக கடந்த மே 12ம் தேதி, வங்கதேச எம்பி கொல்கத்தா வந்திருக்கிறார்.
இளம்பெண் வலையில் சிக்கிய வங்கதேச எம்பி:
சில நாட்களுக்கு முன்பு, இவர் காணாமல் போகியுள்ளார். அதற்கு முன்பு வரை, நண்பர் கோபால் பிஸ்வாஸ் என்பவருடன் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. கொல்கத்தாவின் புறநகரில் உள்ள நியூ டவுனில் உள்ள உயர்தர அடுக்குமாடி வளாகத்தில் அவர் கடைசியாக காணப்பட்டார்.
அங்குதான், அவர் கொடூரமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி தோல் உரித்து பிளாஸ்டிக் பைகளில் வைத்து அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து கொல்கத்தா காவல்துறையும் வங்கதேச காவல்துறையும் விசாரணை செய்து வருகிறது.
கொல்லப்பட்ட வங்கதேச எம்பி அன்வாருல் ஆசிம் அனார் யார்? மே 14ஆம் தேதி அன்று அவர் எங்கு சென்றார்? என்பது காவல்துறை முன்பு இருக்கும் மிகப்பெரிய கேள்விகளாக உள்ளன. இந்த கொலை சம்பவம் குறித்து வங்கதேசத்தை சேர்ந்த ஒருவரை மேற்கு வங்க குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
கொல்கத்தாவை அலறவிட்ட கொடூர கொலை:
கைதானவரின் பெயர் ஜிஹாத் ஹவ்லதார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவருக்கு வயது 24. குல்னா மாவட்டத்தில் உள்ள பராக்பூரில் இவர் வசித்து வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த மேலும் 4 பேருடன் இணைந்து வங்கதேச எம்பியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து மேற்குவங்க சிஐடி அதிகாரிகள் கூறுகையில், "எம்பியின் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரின் தோலை உரித்துள்ளார்கள். எம்பியின் கொலைக்கு மூளையாகக் கூறப்படும் வங்கசேத வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடிமகன் முகமது அக்தருஸ்ஸாமானின் திட்டத்தின் ஒரு பகுதியாக ஹவல்தார் இரண்டு மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவுக்கு அழைத்து வரப்பட்டார்.
மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்தார் ஹவல்தார். பராசத்தில் உள்ள நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு அவரது வாக்குமூலத்தை பெறுவதற்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட உள்ளார். எம்பியின் உடல் இன்னும் கிடைக்கவில்லை" என்றார்கள்.
இளம்பெண் ஆசை வலையில் வீழ்ந்த எம்.பி.
இளம்பெண் ஒருவர் ஆசை வார்த்தைகளை கூறி, இந்த சதியில் வங்கதேச எம்பியை சிக்கவைத்துள்ளார். கொலையாளிகளில் ஒருவருடன் இணைந்து, வங்கதேச எம்பியை மயக்கி கொலைக்கு உடந்தையாக இருந்தவர் ஷிலாஸ்டி ரஹ்மான் என்ற பெண் என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கொல்கத்தா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "விசாரணையில், ஆசை வலையில் எம்.பி. விழுந்தது தெரிய வந்துள்ளது. இளம்பெண் ஒருவர், அவரை மயக்கி சிக்க வைத்ததாக தெரிகிறது. அபார்ட்மெண்ட்க்கு சென்ற உடனேயே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்" என்றார்.
அபார்ட்மெண்டில் இருந்த சிசிடிவி காட்சிகளில் வங்கதேச எம்பி ஒரு பெண்ணுடன் பிளாட்டுக்குள் நுழைவதை பார்க்கலாம். கொலையாளிகளில் ஒருவருடன் இணைந்து செயல்பட்ட ஷிலாஸ்டி ரஹ்மானை டாக்கா போலீசார் கைது செய்துள்ளனர்.