பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் 3,000 கடைகள் கொண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






இன்று காலை பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் 3,000 கடைகள் கொண்ட வணிக வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பல கடைகள் எரிந்து சாம்பலானது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.


அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் தாக்காவில் புகழ்பெற்ற துணிச்சந்தைகள் அமைந்துள்ள பங்காபஜாரின் நெரிசலான பகுதியில் தீ வேகமாக பரவியதை அடுத்து ராணுவ வீரர்கள் உதவிக்கு அழைக்கப்பட்டனர் என அதிகாரிகள் தரப்பில்  கூறப்பட்டுள்ளது.


 தீயை அணைக்கும் பணியில் 50 தீயணைப்புப் வாகனங்கள் ஈடுபட்டு வருவதாகவும், தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும் தீயணைப்புத் துறை அதிகாரி ரஷித் பின் காலித் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். மேலும் பெரும்பாலான கடைகள் தீயில் எரிந்து அழிந்தன என்றும், அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் கடைகளுக்குள் ஆள் யாரேனும் இருந்தார்களா என்பது குறித்து தெரியவில்லை எனவும் காலித் கூறினார்.  தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டத்தால் சூழ்ந்தது. மேலும் தீயணைப்பு பணியின் போது தீ பிழம்புகள் தென்பட்டதால் பணிகள் சற்று தாமதமாகின என தெரிவிக்கப்பட்டுள்ளது.