அட்லஸ் ஏர் விமான நிறுவனத்தை சேர்ந்த சரக்கு விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, அதன் என்ஜினில் குளறுபடி ஏற்பட்டதையடுத்து மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு தாமதமானதையடுத்து விமானியை பயணி ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.
விமான என்ஜினில் தீப்பிடித்ததால் பரபரப்பு:
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அட்லஸ் ஏர் சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. ஆனால், விமானம் புறப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே அதன் என்ஜினில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, எங்கிருந்து புறப்பட்டதோ அதே விமான நிலையத்தில் சரக்கு விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து அட்லஸ் ஏர் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "வழிகாட்டு நெறிமுறைகளை விமான குழுவினர் பின்பற்றியுள்ளனர். மியாமி சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் பாதுகாப்பாக திரும்பியது. நேற்று பிற்பகுதியில் நடந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய ஆய்வு நடத்தப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த சம்பவத்தின் உறுதிப்படுத்தப்படாத வீடியோக்கள் வைரலாகி வருகிறது. நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, அதன் இடது பக்க இறக்கையில் தீப்பற்றி கொண்டு, அதிலிருந்து புகை வெளியே வருவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
தொடர் சர்ச்சையில் போயிங் விமானம்:
போயிங் 747-8 ரக விமானம்தான், இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த ரக விமானங்கள், நான்கு ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஎன்எக்ஸ் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என மியாமி தீயணைப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது. விமானத்தில், விமானக் குழுவினர் எத்தனை பேர் சென்றனர் குறித்தும் தகவல் எதுவும் இல்லை.
விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்து துறையோ, விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனமோ எந்த விதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை.
இந்த மாத தொடக்கத்தில், அமெரிக்காவில் நடுவானில் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அதன் கதவு பலத்த காற்றில் அடித்து செல்லப்பட்டதை தொடர்ந்து, ஒரேகான் மாகாணத்தில் அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து, விமானத்தை தயாரிக்கும் போயிங் நிறுவனம் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.