பாகிஸ்தானில் பனிக்கு இடையே சிக்கி 16 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.


வடக்கு பாகிஸ்தானில் முர்ரீ பகுதியில் பனிமழை பொழிவைக் காண பல சுற்றுலாப்பயணிகள் ஒன்று கூடியுள்ளனர். அந்த சமயத்தில்தான் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. பனிக்குள் சிக்கிய வண்டியில் இருந்து தப்பிக்க முடியாமல் உரைந்துபோய் அவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுதவிர இன்னும் 1000 வாகனங்கள் அங்கே பனியில் சிக்கி அசைய முடியாமல் உள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதனை அடுத்து அந்தப் பகுதி பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. முர்ரீ , தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 40 மைல் தொலைவில் உள்ளது. கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு சுற்றுலாப்பயணிகள் முர்ரீயில் கூடியதால்தான் இந்த பேரிடர் நிகழ்ந்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


முர்ரீ பகுதியில் உள்ள ஒரு மலைப்பிரதேசத்தில் மட்டும் 1000 கார்கள் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில்தான் 16 முதல் 19 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 







இதையடுத்து மேலும் அங்கே பயணிகள் கூடாமல் இருக்க முர்ரீ செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. 


பொதுமக்களின் உயிரிழப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார். 






பனியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க அங்கே ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.