“பாகிஸ்தானில் புதிதாக உருவாக்கப்பட்ட ‘பாதுகாப்பு படைகளின் தலைவர்‘ பதவி“
பாகிஸ்தானில், பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசியல் சாசனத்தின் 243-வது பிரிவில், 27-வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் கடும் பின்னடைவை சந்தித்ததால் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதோடு, ராணுவத் தளபதியான பீல்டு மார்ஷல் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வழங்கும் வகையிலும் இந்த புதிய பதவி உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு படைகளின் தலைவராக நியமிக்கப்பட்ட அசிம் முனீர்
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் முதல் பாதுகாப்பு படைகளின் தலைவராக அசிம் முனீரை நியமிக்க அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக அதிபர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 5 ஆண்டு காலத்திற்கு பாதுகாப்புப் படைகளின் தலைவராக ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீரை நியமனம் செய்ய, பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரையை அதிபர் ஆசிப் அலி சர்தாரி அங்கீகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு பொறுப்பேற்கும் அசிம் முனீர், ராணுவத் தளபதியாகவும் தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைகளின் தலைவர் பதவி என்பது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என முப்படைகளையும் கட்டுப்படுத்தும். இதுவரை முப்படைகளுக்கான அதிகாரம், அதிபர் மற்றும் அமைச்சரவை கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், இனி அந்த அதிகாரம் ஒரு நபரின் கைக்கு, அதாவது அசிம் முனீர் கைக்கு வந்துள்ளது.
பாகிஸ்தானின் ராணுவம் கடந்து வந்த பாதை
240 மில்லியன் மக்களைக் கொண்ட அணுசக்தி நாடான பாகிஸ்தான், 1947-ல் உருவாக்கப்பட்டதிலிருந்து பொதுமக்கள் மற்றும் ராணுவ ஆட்சிக்கு இடையே தடுமாறிக் கொண்டிருக்கிறது. நாட்டை வெளிப்படையாக ஆட்சி செய்த கடைசி ராணுவத் தலைவர் பர்வேஸ் முஷாரஃப் ஆவார். அவர் 1999-ல் அப்போதைய ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றி, 2008-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார். அப்போதிலிருந்தே, சிவில் நிர்வாகங்கள் அதிகாரப்பூர்வமாக அதிகாரத்தை கொண்டுள்ளன. இருப்பினும், பாகிஸ்தானின் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ராணுவத்தின் செல்வாக்கு ஆழமாக வேரூன்றி உள்ளது.
இந்த ஆண்டு ஃபீல்ட் மார்ஷல் பதவிக்கு பதவி உயர்வு பெற்ற அசிம் முனீர், ராணுவத் தலைமைத் தளபதி பதவியையும், சி.டி.எஃப். கடமைகளையும் ஒரே நேரத்தில் வகிப்பார், இதனால் பல தசாப்தங்களில் பாகிஸ்தானின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக அசிம் முனீர் திகழ்கிறார். பாகிஸ்தானின் வரலாற்றில், 5 நட்சத்திர ஃபீல்ட் மார்ஷல் பதவியையும், COAS மற்றும் CDF ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கட்டளையையும் ஒரே நேரத்தில் பெற்ற முதல் ராணுவ அதிகாரி இவர்தான். 1965-ம் ஆண்டு இந்தியாவுடனான போரின் போது, பாகிஸ்தானை வழிநடத்திய ஜெனரல் அயூப் கானுக்குப் பிறகு, நாட்டின் வரலாற்றில், ஃபீல்ட் மார்ஷல் பட்டத்தை வகிக்கும் இரண்டாவது ராணுவ அதிகாரி அசிம் முனீர் தான்.
அசிம் முனீர் மீது இம்ரான் கான் வைத்த குற்றச்சாட்டு
ஆபரேஷன் சிந்தூரின்போது, பாகிஸ்தான் படைகள் கெஞ்சியே தாக்குதலை நிறுத்தியதாக இந்தியா கூறியது. அதே நேரத்தில், பெரிய போர் உருவாவதை நிறுத்தியதில் பெரும் பங்கு வகித்தவர் என்று கூறி, அசிம் முனீரை அமெரிக்காவிற்கு அழைத்து, மதிய விருந்தெல்லாம் கொடுத்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதைத் தொடர்ந்து, ட்ரம்ப்பின் பெரிய ஆதரவாளராக மாறினார் அசிம் முனிர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அசிம் முனிர் வரலாற்றில் ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரி தனக்கு அளிக்கப்படும் சித்ரவதைக்கு அவர்தான் காரணம் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது அசிம் முனீருக்கு பெரிய பதவி வழங்கப்பட்டுள்ளதால், இனி என்ன நடக்குமோ என்ற அச்சமும் ஒருபுறம் எழுந்துள்ளது.