உக்ரைனுக்கான அமைதித் திட்டத்தை ஒப்புக்கொள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ​​ரஷ்யாவிற்கு தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக கூறியுள்ளார். இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகை வரை கெடு விதித்துள்ளார் ட்ரம்ப். இதனால்,  அடுத்து என்ன ஆகுமோ என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

ஜெலன்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்துவரும் ட்ரம்ப்

ரஷ்யா - உக்ரைன் இடையே ஆண்டுக்கணக்கில் போர் தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக அமெரிக்கா பரிந்துரைத்த 28 அம்ச அமைதி திட்டத்தில், ரஷ்யாவுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதாகக் கூறி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து புகார் கூறினார்.

இதைத் தொர்ந்து, திருத்தப்பட்ட புதிய திட்டத்தை அமெரிக்கா வழங்கியது. அது குறித்த பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் பிதிநிதிகள் அதை ஏற்றுக் கொண்டதாக ட்ரம்ப் கூறும் நிலையில், ஜெலன்ஸ்கி இன்னும் எந்த பதிலும் அளிக்காமல் இருக்கிறார். அதே நேரம், உக்ரைன் இந்த அமைதித் திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஜெலன்ஸ்கி மீது விரத்தியை ட்ரம்ப் வெளிப்படுத்தி இருந்தார்.

Continues below advertisement

ஜெலன்ஸ்கி கூறுவது என்ன.?

இந்த நிலையில், அது குறித்து பேசியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ரஷ்யா எங்களிடம் நிலத்தை விட்டுக் கொடுக்குமாறு வலியுறுத்தி வருகிறது. நாங்கள் ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். நாங்கள் எதையும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை, அதற்காகவே நாங்கள் போராடி வருகிறோம்.“ என கூறியுள்ளார்.

மேலும், உக்ரைனின் சட்டம், அதன் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டம், எந்த சலுகைகளையும் அனுமதிக்காது என்று கூறியுள்ள அவர், வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், நிலத்தை விட்டுத்தர எங்களுக்கு தார்மீக உரிமை இல்லை என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - பதற்றம்

இதனிடையே, தாங்கள் வழங்கிய அமைதித் திட்டத்தை உக்ரைன் ஏற்றுக்கொள்ள வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரை அதிபர் ட்ரம்ப் கெடு விதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால், உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ஜெலன்ஸ்கி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், முழு போர் ஏற்பட்டு மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமை பாதிக்கப்படுமோ என்று ஐரோப்பிய தலைவர்கள் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜெலன்ஸ்கி மீது குற்றம்சாட்டியுள்ள ட்ரம்ப், உக்ரைன் பிதிநிதிகள் அமைதி ஒப்பந்தத்தை ஏற்பதாகவும், ஜெலன்ஸ்கி இன்னும் ஒப்பந்தத்தை படித்துப் பார்க்கவே இல்லை, அதனால் அதை படிக்க அவர் முதலில் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும் கூறினார். இந்நிலையில், தற்போது அவர் கெடுவையும் விதித்திருப்பதால், உலக அளவில், என்ன நடக்குமோ என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.