கடந்த 2022 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நிலையில், கிட்டத்தட்ட 18 மாதங்களாக போர் தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் போரில் உக்ரைன் சற்று பின் தங்கியிருந்தாலும் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் உதவியுடன் தற்போது வரை தாக்குப்பிடித்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் இருந்து ரஷியா, தங்களின் படைகளை திரும்பப்பெற்றது. சமீப காலமாகவே, போரில் ரஷியா பின்னடைவுகளை சந்தித்து வந்த நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் அந்நாடு மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியது.


ரஷ்யா - உக்ரைன் போர்:


இந்த போரை நிறுத்த இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்கள், கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் போன்றவை இரு நாட்டு தாக்குதலில் சிக்கி கடுமையாக சேதமடைந்து வருகிறது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போரினால ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகிறது.


சமீபத்தில் உக்ரைன் நாட்டிற்கு 2.5 பில்லியன் டாலரை அமெரிக்கா வழங்கியது. மேலும் 31 போர் பீரங்கிகளை வழங்கவும் உறுதியளித்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருவது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், அமெரிக்கா மேலும் 250 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததிலிருந்து அமெரிக்கா இதுவரை 10 பில்லியன் டாலருக்கு அதிகமான பொருளாதார மற்றும் ராணுவ ரீதியிலான உதவிகளை செய்துள்ளது.


போருக்கான காரணம் என்ன?


பல காலமாக உக்ரைன் பிரச்னை நிலவி வந்தாலும், உக்ரைன் நேட்டோவில் இணைய வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக காட்டி வரும் ஆர்வம்தான்தான் இந்த போருக்கு காரணமாக அமைந்தது. கடந்த 1960களில், அமெரிக்க ரஷியாவுக்கு இடையில் நிலவி வந்த உச்சக்கட்ட பனிப்போருக்கு பிறகு, நடந்த மிக மோசமான மோதலாக மாறியுள்ளது உக்ரைன் போர். இதனால், அமெரிக்க, ரஷிய நாடுகளின் உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.


உக்ரைன் திடீரென அமெரிக்காவுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் நெருக்கம் காட்டுவதுதான் ரஷ்யாவுக்கு பிரச்சனையை தந்தது. ஏற்கனவே, ரஷியாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய தலைவலியாக மாறிவிடும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும். எனவேதான், நோட்டாவில் உக்ரைன் இணைய ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.