ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கத்தார், ஈராக்கில் தாக்குதல் நடத்திய ஈரான்
ஈரானில் உள்ள அணுசக்தி மையங்களை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து, தோகாவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
அல் உதெய்த்தில் அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தியதாக ஈரான் அரசு ஊடகம் கூறியுள்ளது. அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஒரு வெற்றிகரமான மிகப்பெரும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு ‘Blessing of Victory‘ என பெயரிடப்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதோடு, அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்க எத்தனை குண்டுகளை பயன்படுத்தியதோ, அதே அளவு குண்டுகளை தாங்களும் பயன்படுத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை, எங்களுடைய நட்பு மற்றும் சகோதரத்துவ நாடான கத்தாருக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தல் கிடையாது எனவும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.
ஈரானுக்கு கத்தார் கண்டனம்
ஈரான் இவ்வாறு கூறினாலும், அந்நாடு கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது நடத்திய தாக்குதலுக்கு கத்தார் கண்டனம் தெரிவித்துள்ளது.
கத்தார் பிரதமரின் ஆலோசகரும், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளருமான மஜத் அல் அன்சாரி, இத்தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஈரான் நடத்திய தாக்குதல் இறையாண்மையின் அப்பட்டமான மீறல் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச விதிகளின்படி, ஈரான் நடத்திய அதே விதமான தாக்குதலை தாங்களும் நடத்த உரிமையுள்ளத என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஈரான் நடத்திய தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது மேலும் தொடர்ந்தால், அந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதலால் தோகா விமான நிலையம் மூடல்
ஈரான் நடத்திய தாக்குதலையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தோகா விமான நிலையம் மூடப்படுவதாக கத்தார் அறிவித்துள்ளது. நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மீண்டும் விமான சேவைகள் தொடங்குவது குறித்து மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தோகா விமான நிலையம், பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்கான இணைப்புப் புள்ளியாக இருப்பதால், விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அவ்வழியாக செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து 11 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.