பாகிஸ்தான் ராணுவத்தை கடுமையாக விமர்சித்ததன் காரணமாக, அங்கிருந்து தப்பி சென்ற பத்திரிகையாளர் அஷ்ரஃப் ஷெரீப் கென்யா நாட்டில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
ராணுவ விமர்சனம்:
முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளராக கருதப்படும் அஷ்ரஃப் ஷெரீப், அவ்வப்போது பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து வந்தார். இதன் காரணமாக, அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் கைது செய்வதில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாடு சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கென்யா காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள கென்யா தரப்பானது, குழந்தை கடத்தல் தொடர்பாக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அஷ்ரப் வந்து கொண்டிருந்த காரானது, நிற்காமல் சென்றது. இதனால் காரை துரத்தி, நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அஷ்ரப் தலையின் மீது குண்டு பாய்ந்ததில் மரணமடைந்தார்.
அஷ்ரப் மறைவுக்கு, பாகிஸ்தான் நாட்டின் அதிபர் ஆரிப் அல்வி, பிரதமர் செபாஸ் செரீப் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலை பாகிஸ்தான் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான்:
மேலும் அஷ்ரப் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், உண்மையைப் பேசியதற்காக உயிரை விலையாக கொடுத்த அர்ஷத் ஷெரீப்பின் மிருகத்தனமான கொலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
உண்மையை பேசியதற்காக, அவர் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் ஒளிந்து கொள்ள வேண்டியிருந்தது, ஆனாலும் அவர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து உண்மையைப் பேசினார், சக்தி வாய்ந்தவர்களை அம்பலப்படுத்தினார்.
”விசாரணை வேண்டும்”
இவரது மரணம் குறித்து நியாயமான நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும். மேலும், அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது மறைவுக்கு முழு தேசமும் இரங்கல் தெரிவிக்கிறது என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து, தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறந்த நண்பன், சிறந்த பத்திரிகையாளர் மற்றும் கணவனை இழந்துவிட்டேன் என அஷ்ரஃப் ஷெரீப்பின் மனைவி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடானது, பத்திரிகை சுதந்திரம் தொடர்பான குறியீட்டில், 180 நாடுகள் உள்ளடக்கிய பட்டியலில் 157 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.