இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகம் முழுவதும் 1500 மொழிகள் அழிய இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.


இந்த ஆய்வின் முடிவுகளை கட்டுரையாக வரைந்தவர்களில் ஒருவரான பேராசிரியர் லிண்டல் ப்ரோம்ஹாம் கூறியதாவது, “உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட 7000 மொழிகளில் பாதிக்கும் மேற்பட்டவை தற்போதே அழிவின் விளிம்பில் உள்ளன. உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால்,  அடுத்த 40 ஆண்டுகளில் இந்த இழப்பு மூன்று மடங்கு அதிகரிக்கும். இந்த நூற்றாண்டின் முடிவில் முற்றிலும் 1500 மொழிகள் அழிந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.


பள்ளிக் கல்வி முறையும் மொழிகள் அழிய ஒரு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பள்ளிக் கல்வி முறையில் இரட்டை மொழிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். உள்நாட்டு மொழியை அது பேணுவதாக இருக்க வேண்டும். கூடவே அந்தந்த வட்டாரத்துக்கு உரிய மொழியையும் அது பேண வேண்டும்.
சாலை வசதியும் மொழி அழிய ஒருக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியான காரணமாக இருக்கிறது. சாலைகள் நகரங்களையும் கிராமங்களையும் இணைக்கின்றன. இதனால் நகரத்தில் உள்ள ஆதிக்கம் வாய்ந்த மொழி கிராமத்தில் இருக்கும் சிறிய மொழிவழக்கை ஒழித்துவிடுகிறது.


ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையிலுமே கூட, ஆஸ்திரேலியாவின் பூர்வக்குடிகள் பேசும் மொழியைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆஸ்திரேலியாவில் உலகிலேயே அதிகளவு மொழிகள் இருக்கின்றன. க்யூன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃபெலிசிட்டி மீக்கின்ஸ் கூறுகையில், காலனி ஆதிக்கத்திற்கு முன்னதாக 250 பூர்வக்குடி மொழிகள் இங்கு பேசப்பட்டது இப்போது 40 மட்டுமே பேசப்படுகிறது. அவற்றிலும் 12 மட்டுமே குழந்தைகளுக்கு கற்றுத் தரப்படுகிறது. என்றார்.


முதல் மொழிகளைக் காக்க நிதி ஆதாரமும், ஆதரவும் தேவை. ஆஸ்திரேலியா இந்த மொழிகளைப் பாதுகாக்க மிகக் குறைவாகவே செலவழிக்கிறது என்றார்.


பேராசிரியர் ப்ரோம்ஹாம் கூறும்போது, ஒரு மொழி பேசப்படாமல் உறங்கும் நிலைக்கு வந்தால், நாம் கலாச்சார பன்முகத்தன்மையை இழக்கிறோம். ஒவ்வொரு மொழியும் அதன் வழியில் சிறந்தது.


இன்று எழுத்துமுறை ஒழிந்துவிட்ட பல மொழிகளும் கூட நிறைய பேர் மத்தியில் பேசப்படுவதாக இருக்கிறது. ஆகையால் அழியும் மொழிகளை மீட்க நிறைய முதலீட்டை செய்ய வேண்டும் என்று கூறினார்.


மொழிகள் அழிவிற்கான காரணமாக 51 காரணிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து பட்டியலிட்டுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் பிற மொழிகள் மீதான தடையை நீக்க வேண்டும். குழந்தைகள் பிற மொழிகளைக் கற்க ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர் ஆதிக்க மொழிகளைத் தாண்டி தங்கள் குழந்தைகள் தங்களின் பாரம்பரிய மொழியைப் பேசவும் ஊக்குவிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.