குணா குகையில் கமல் உரக்கக் கத்தி மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல. அதையும் தாண்டி அது புனிதமானது என்று பேசிய டயலாக் என்னவோ உன்னதமானதாக இருந்தாலும் பெரும்பாலும் அது சினிமாவிலேயே கலாய்ப்பதற்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.


பெல்ஜியத்தில் ஓர் இளம் பெண்ணுக்கும் சிம்பான்ஸிக்கும் இடையேயான காதல் இந்த டயலாக்கை தமிழறிந்தவர்கள், சினிமா தெரிந்தவர்களை உச்சரிக்க வைத்துள்ளது. பெல்ஜியத்தில் உள்ளது ஆன்ட்வெர்ப் வன உயிரியல் பூங்கா. இந்தப் பூங்காவில் சிம்பான்ஸி வகைக் குரங்குகளும் வளர்க்கப்படுகின்றன. இந்தப் பூங்காவுக்கு எய்ட் டிம்மெர்மேன்ஸ் என்ற இளம் பெண் வாரம் தவறாமல் வரத்தொடங்கினார். ஆரம்பத்தில் பூங்கா பராமரிப்பாளர்களும் அந்தப் பெண்ணுக்கு வன விலங்குகள் மீது ஈடுபாடு என்றே நினைத்தனர். ஆனால், வாரந்தோறும் வரத் தொடங்கிய அந்தப் பெண் குறிப்பாக சிட்டா என்ற சிம்பன்ஸியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணாடி தடுப்புக்கு அந்தப் புறமிருந்து சிம்பன்ஸிக்கு எய்ட் கையசைப்பதும் பதிலுக்கு சிட்டா கையசைப்பதும். இருவரும் மாறி மாறி காற்றில் முத்தங்களைப் பரிமாறிக் கொள்வதுமாக இருந்துள்ளனர். ஒரு வாரம், இரண்டு மாதமல்ல 4 வருடங்கள் இந்தக் காதல் நீண்டுள்ளது.


ஒரு கட்டத்தில் சிட்டா மற்ற குரங்குகளுடன் பழகுவதையே நிறுத்திவிட்டது. இதனால், பூங்கா பராமரிப்பாளர்களுக்கு சந்தேகம் வந்தது. இதனைத் தொடர்ந்து பூங்கா பராமரிப்பாளர்கள் எய்ட் டிம்மெர்மேன்ஸ் இனி பூங்கா பக்கமே வரக்கூடாது எனக் கெடு விதித்துள்ளனர். இது குறித்து எய்ட் டிம்மெர்மேன்ஸ், எனக்கு விலக்குகள் என்றால் பிடிக்கும். குறிப்பாக சிட்டா என்ற சிம்பான்ஸி என் மீது அன்பாக உள்ளது. நாங்கள் இருவரும் பரஸ்பரம் நேசிக்கிறோம். எங்களுக்கு இடையே வேறு எதுவும் இல்லை. எங்களை ஏன் பிரிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்


பூங்கா நிர்வாகமோ சிட்டா மெதுவாக மற்ற குரங்குகளிடமிருந்து விலகி வருவதாகக் கூறுகின்றனர். இப்போது எய்ட் சிட்டாவைக் காணாமலும், சிட்டா சிம்பான்ஸி எய்ட் டிம்மெர்மேன்ஸைப் பார்க்காமலும் வாடுகின்றனர். இப்போ சொல்லுங்கள் குணா குகையில் கமல் உரக்கக் கத்தி மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.. அதையும் தாண்டி அது புனிதமானது என்று பேசிய டயலாக் இந்த சிம்பான்ஸி காதல் கதைக்குப் பொருத்தமானதாகத்தான் இருக்கும்.


சிம்பன்ஸி என்பது வாலில்லா ஒரு மனிதக் குரங்கு இனம். பல மரபியல் ஆய்வு முடிவுகள் சிம்பன்ஸியே மனிதனுக்கு மிக நெருங்கிய இனம் எனக் கூறுகின்றன. வெவ்வேறு ஆய்வு முடிவுகளிடையே சிறிய வேறுபாடுகள் இருப்பினும், மனிதரிலுள்ள 95-99% டி.என்.ஏ சிம்பன்ஸிகளில் டி.என்.ஏவை ஒத்திருப்பதாக அறியப்படுகின்றது. இவை மனிதனை ஒத்திருந்தாலும், உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். மனிதனோடு இவையும் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை ஆப்பிரிக்காவில் மேற்குப் பகுதிகளிலும், நடுப் பகுதிகளிலும் வாழ்கின்றன.