கொலம்பியா நாட்டின் தலைநகர் பகோடாவுக்கு அருகில் உள்ள குவாடாவிடா பகுதியில் தலைகீழாகக் கட்டப்பட்டிருக்கும் வீடு ஒன்று கொரோனா தொற்றுக்கால விதிமுறைகளுக்கு உட்பட்டு பொழுது போக்க விரும்புபவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
ஆஸ்த்ரியா நாட்டைச் சேர்ந்த ப்ரிட்ஸ் ஷால் என்பவரால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள இந்தத் தலைகீழ் வீட்டில் சுற்றுலா பயணிகள் அறைகளின் மேற்பகுதியில் நடப்பதோடு, வீட்டின் பொருள்களும் தலைகீழாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.
`அனைவரும் என்னைப் பைத்தியம் எனக் கருதினர்; நான் சொல்வதை யாரும் நம்பவில்லை. நான் தலைகீழ் வீடு ஒன்றைக் கட்டப் போகிறேன் என்று மக்களிடம் கூறினேன். அவர்களும் கிண்டலாக, `சரி, போய் அப்படியே செய்’ என்று என்னிடம் கூறினர்’ என்று கூறுகிறார் இந்தக் கட்டிடத்தின் வடிவமைப்பாளரும், உரிமையாளருமான ப்ரிட்ஸ் ஷால். இவர் கொலம்பியா நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
2015ஆம் ஆண்டு தனது பேரக் குழந்தைகளுடன் சொந்த நாடான ஆஸ்த்ரியா நாட்டுக்குப் பயணம் சென்ற போது, அங்கு இதுபோன்ற தலைகீழ் வீட்டைப் பார்த்து, அதில் இருந்து தனக்கும் இதே போல ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்ற ஆர்வம் உருவானதாகக் கூறுகிறார் ப்ரிட்ஸ் ஷால்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வீட்டின் கட்டிடப் பணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறும் ப்ரிட்ஸ் ஷால் இறுதியாக இந்த ஆண்டின் தொடக்கத்தின்போது அனைத்து பணிகளும் முடிவடைந்ததாகவும் கூறுகிறார்.
`கொரோனா பெருந்தொற்று எங்கள் வேகத்தை சற்றே குறைத்தது. ஆனால் இப்போது இந்தப் பணி முடிவடைந்தது. மூன்று வாரங்களுக்கு முன்பு, தலைகீழ் வீட்டை நாங்கள் திறந்து வைத்தோம்’ என்று கூறுகிறார் ப்ரிட்ஸ் ஷால்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகளில் இருந்தும், மக்கள் நடமாடுவதற்கான தடைகளில் இருந்தும் தங்களை விலக்கிக் கொள்ள விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு இந்தத் தலைகீழ் வீடு நிவாரணமாக விளங்குகிறது.
கொலம்பியா நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணியான லினா குவாடிரெஸ் என்பவர், `நாங்கள் பெருந்தொற்றில் இருந்து வந்துள்ளோம். ஒரு ஊரடங்கைச் சமாளித்து இங்கு வந்திருக்கிறோம். இது எங்களைப் போன்றவர்களுக்கு நிவாரணமாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கிறது’ என இந்தத் தலைகீழ் வீடு குறித்து கூறியுள்ளார்.