அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் 68 வயதான ஓய்வுபெற்ற செவிலியர் ஒருவர் கடும் குளிரில் சுமார் 5 நாள்கள் தலைகீழாக விழுந்த தனது காரில் உயிரைக் கையில் பிடித்து தப்பிய கதையைக் கூறியுள்ளார். 


கடந்த நவம்பர் 18 அன்று, 68 வயதான ஓய்வுபெற்ற செவிலியர் லினெல் மெக்ஃபார்லேண்ட் தன்னுடைய உறவினரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பும் போது, அவரது கார் பனிக்கட்டியில் சறுக்கி தலைகீழாக கவிழ்ந்துள்ளது. 


வாஷிங்டனில் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இரண்டு மரங்களுக்கு இடையிலான குழி ஒன்றில் கவிழ்ந்து சிக்கிய கார், அவரது கைகள், கால்கள் ஆகியவற்றில் உள்ள எலும்புகள் முறியும் அளவுக்கு அவரைப் பாதித்துள்ளது. 


லினெல் மெக்ஃபார்லேண்ட் தன்னுடைய செல்ஃபோன், ஷூக்கள், தண்ணீர் பாட்டில் முதலானவற்றைக் காரின் முன் பக்கம் வைத்திருந்ததாகவும், தன்னுடைய காயங்களின் காரணமாக அவை அவருக்கு எட்டவில்லை என்றும் கூறியுள்ளார். 



தன் மகளுடன் லினெல்


 


லினெல் மெக்ஃபார்லேண்ட்டின் செல்ஃபோனுக்கு அழைத்த போது, அவர் அழைப்பை ஏற்காததால், அவரது மகள் அமேண்டா மெக்ஃபார்லேண்ட் தன் தாயைக் காணவில்லை எனக் காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். 


`அவருடைய பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவரைக் காணவில்லை எனக் கூறினர். நான் அவர் தனது செல்ஃபோனைத் தொலைத்திருக்க மாட்டார். ஏதோ பிரச்னை நடந்திருக்கிறது என எண்ணினேன்’ என்கிறார் அமேண்டா. 


வாஷிங்டனின் கிட்டிடாஸ் பகுதி காவல்துறையினர் லினெல் மெக்ஃபார்லேண்டின் செல்ஃபோன் இருந்த இடத்தின் மூலமாக அவர் இருக்கும் பகுதியைக் கண்டுபிடித்தனர். 


இதுகுறித்து பேசிய லினெல், தான் அன்றே சில காவல்துறை அதிகாரிகளை அந்தப் பகுதியில் பார்த்ததாகவும் மரங்கள் மறைத்திருந்ததால் அவர்களால் லினெலின் காரைக் கவனிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார். 


தன் தாயின் செல்ஃபோன் இருந்த இடம் தெரிய வந்ததும், தன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அமேண்டா நெடுஞ்சாலையின் பகுதிகளில் வாழும் நண்பர்களிடம் தன் தாயைத் தேடித் தருமாறு வேண்டுகோள் விடுத்தார். 



விபத்து நடைபெற்ற சாலைப் பகுதி


 


லினெல் மெக்ஃபார்லேண்ட் தன்னுடைய கையில் எலும்பு முறிவையும், தன் காலின் மூட்டுப் பகுதியில் மற்றொரு எலும்பு முறிவையும் பெற்றதை உணர்ந்துள்ளார். `எனது சீட் பெல்டை அறுக்க முயன்ற போது, என் காலின் எலும்பு வெளியே தெரிந்தது’ என இதுகுறித்து கூறியுள்ளார் அவர். நாள்கள் தொடர்ந்து செல்ல செல்ல, அவர் தன்னுடைய பெற்றோர் அவரை அணைக்கும் உணர்வைப் பெற்றுள்ளார். 


`என் தந்தை சுமார் 6 மாதங்களுக்கு முன் மரணம் அடைந்தார். அவரது கைகள் என்னைச் சுற்றி அணைத்துக் கொண்டது போல உணர்ந்தேன். அப்போது கடவுளிடம், `நான் என்றேனும் மரணம் அடைவேன் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் கண்டுபிடிக்க முடியாத இந்த இருட்டு இடத்தில் மரணமடைய விரும்பவில்லை’ என வேண்டினேன்’ எனக் கூறுகிறார் லினெல். உணவு எதுவும் இல்லாமல் அங்கு பெய்த மழை காரணமாக தேங்கிய மழைநீரை நக்கிக் குடித்தபடி உயிர் வாழ்ந்துள்ளார் லினெல். 


இறுதியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார். சமீபத்தில் தன் மகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய லினெல், `என்னைக் கண்டுபிடித்தது ஒரு பேரதிசயமான நிகழ்வு. நான் உயிருடன் இருந்தது என் பிடிவாதத்தைக் குறிக்கவில்லை. என் உறுதியைக் குறுக்கிறது’ என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.