2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பாவும், 2001-ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமதுவும், பாகிஸ்தான் மண்ணிலிருந்து தொடர்ந்து இயங்கி வருவதாக, அமெரிக்காவில் வெளியான காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை(CRS) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
CRS என்பது என்ன.?
இந்த காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை என்பது. அமெரிக்க காங்கிரஸின் ஒரு சுதந்திரமான ஆராய்ச்சிப் பிரிவாகும். இது, காங்கிரஸ் உறுப்பினர்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும் வகையில், பல்வேறு பிரச்னைகள் குறித்து காலமுறை அறிக்கைகளை தயாரிக்கிறது. அதன் அறிக்கைகள், காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடுகளாக கருதப்படுவதில்லை.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் குறித்து CRS அறிக்கை
அமெரிக்காவில் வெளியான காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை(CRS) அறிக்கை ஒன்றில், இந்தியாவையும், காஷ்மீரையும் குறிவைக்கும் குழுக்கள் உட்பட, பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தான் தனது மண்ணில் தொடர்ந்து அடைக்கலம் அளித்து வருவதாக கண்டறிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் மற்றும் கொள்கை ரீதியான நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அந்த பயங்கரவாதக் குழுக்கள் "பாகிஸ்தான் மண்ணில் தொடர்ந்து இயங்கி வருகின்றன" என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவை இலக்காகக் கொண்ட பல குழுக்கள் இன்னும் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், 2008 மும்பை தாக்குதல்களுக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பாவும், 2001-ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமதுவும் பாகிஸ்தான் மண்ணிலிருந்து தொடர்ந்து இயங்கி வருவதாக காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை தெரிவித்துள்ளது.
தாறுமாறாக உயர்ந்த பயங்கரவாதம் தொடர்பான மரணங்கள்
மேலும், அந்த அறிக்கையின்படி, சமீபத்திய ஆண்டுகளில், பாகிஸ்தானில் பயங்கரவாதத்தின் போக்கு கடுமையாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக குறைந்து, 2019-ல் 365 ஆகக் குறைந்திருந்த நிலையில், பின்னர் ஆண்டுதோறும் அதிகரித்து, 2025-ம் ஆண்டு 4,001-ஆக உயர்ந்து, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக பாகிஸ்தான் உள்ளதாகவும், இது, 2021-ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கியதைப் பிரதிபலிப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான பயங்கரவாதக் குழுக்கள் இஸ்லாமியத் தீவிரவாத சித்தாந்தத்தால் உந்தப்படுவதாகவும் அமெரிக்க காங்கிரஸின் ஆய்வுக் குழுவும் கண்டறிந்துள்ளது.
தொடர்ந்து இயங்கிவரும் ‘அல் கொய்தா‘
மேலும், இந்த குழுக்கள் உலகளாவிய நோக்கம் கொண்டவை, ஆப்கானிஸ்தான் நோக்கம் உடையவை, இந்தியா மற்றும் காஷ்மீர் நோக்குடையவை, உள்நாட்டு கவனம் கொண்டவை மற்றும் மதவாத அமைப்புகள் என 5 பரந்த பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அல் கொய்தாவின் மையம் கடுமையாக சிதைக்கப்பட்ட போதிலும், அப்பகுதியில் அது தொடர்ந்து இயங்கி வருவதுடன், பிற தீவிரவாத அமைப்புகளுடனும் கூட்டணிகளை பேணிவருவதாகவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அரசின் பிராந்திய கிளையான, இஸ்லாமிய அரசு-கொராசான் மாகாணம், சுமார் 4,000 முதல் 6,000 போராளிகளைக் கொண்டுள்ளதுடன், பிற தீவிரவாத குழுக்களின் முன்னாள் உறுப்பினர்களைக் கொண்டு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் முழுவதும் செயல்படுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, உள்நாட்டில், பாகிஸ்தானில் செயல்படும் மிகவும் கொடிய பயங்கரவாதக் குழுவாக தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் விவரிக்கப்படுகிறது. இந்த குழுவில் சுமார் 2,500 முதல் 5,000 போராளிகள் வரை உள்ளதாகவும், பாகிஸ்தான் அரசை கவிழ்த்து, ஷரியா சட்டத்தை திணிப்பதே இதன் வெளிப்படையான நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
