உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று பரவல் இருந்து வருகிறது. கொரோனா பாதிப்பு இல்லாமல் நீண்ட நாட்களாக இருந்த வட கொரியாவில் தற்போது கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. வட கொரியாவில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் அங்கு நிலவும் அசாதாரண சூழலை சமாளிக்க வட கொரியா ராணுவத்தை அதிபர் கிம் ஜான் களமிறக்கியுள்ளார். மக்களுக்கு அவசர கால உதவியை செய்ய ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக வடகொரியாவின் தலைநகரான பயோங்யாங் பகுதியில் ராணுவத்தினர் தீவிரமாக மருந்துகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தற்போது வரை நோய் தொற்று காரணமாக 56 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 2 லட்சத்து 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுளது.அத்துடன் 6,63,910 மூத்த குடிமக்கள் நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவ மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மக்களை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வட கொரியா நாட்டிற்கு தென்கொரியா மருத்துவ உபகரணங்கள் கொடுத்து உதவி வருகின்றனர். வடகொரியா நாட்டில் கடந்த வியாழக்கிழமை முதல் முறையாக கொரோனா தொற்று பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கொரோனா தொற்று பரவல் அந்நாட்டின் தலைநகரில் வேகமாக பரவி வருகிறது. வட கொரியாவில் மருத்துவ வசதிகள் சற்று பின் தங்கியிருப்பதால் அங்கு நிலவும் சூழல் மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு விரைவில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வர அரசு தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்