உலகின் சக்தி வாய்ந்த ஒன்று என்ன என்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை தருவார்கள். ஆனால், அதற்கு ஒரே பதில்தான் இருக்கிறது. அதுதான் அன்பு. ஏனெனில், இந்த உலகம் அடுத்த நொடிக்கு நகர்வதற்கு முக்கிய காரணியாக இருப்பதே அன்புதான்.


அப்படிப்பட்ட அன்பின் வெளிபாடே காதல். சாதி, மதம், இனம், நாடு, கண்டம், பாலினம் என அனைத்து தடைகளையும் கடந்து நிற்கும் சொல் காதல். குறிப்பிட்ட நபர், குறிப்பிட்ட நபரைதான் காதலிக்க வேண்டும் என்றெல்லாம் தடை விதிக்க முடியாது.


இயற்கையை எப்படி ஒருவரால் தடுக்க முடியும். அப்படிதான், காதலையும் யாரும் அதை கட்டுப்படுத்த முடியாது. இப்படியிருக்க, ஒரே பாலினத்தில் உள்ள இருவர் காதலிப்பதை மட்டும் எப்படி தடுக்க முடியும். அவர்கள், திருமணம் செய்து கொள்வதை எப்படி தடுக்க முடியும்.


இருப்பினும், தன்பாலின காதலை பழமைவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். கலாசாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என விமர்சனம் முன்வைக்கின்றனர். ஆனால், பல நாடுகள் அதற்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன.


ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்க நாடாளுமன்றத்தில் தன்பாலின திருமண மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.


கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்தது போல தன்பாலின திருமணத்திற்கான அங்கீகாரத்தையும் பழமைவாத நீதிபதிகள் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க உச்ச நீதிமன்றம் திரும்ப பெற்றுவிடுமோ என்ற அச்சம் எழுந்த நிலையில், தேசிய அளவில் தன்பாலின திருமண சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் அமெரிக்க செனட் சபையில் கடந்த மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் குறிப்பிட்ட மசோதா சட்டமாக வேண்டும் என்றால், செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையிலும் அது நிறைவேற்றப்பட வேண்டும். ஏற்கனவே, செனட் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது பிரதிநிதிகள் சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.


பிரதிநிதிகள் சபையில் தன்பாலின திருமண மசோதாவுக்கு ஆதரவாக 258 வாக்குகளும் எதிராக 169 வாக்குகளும் கிடைத்தன. ஒட்டுமொத்த ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் மட்டும் இன்றி குடியரசு கட்சியை சேர்ந்த 39 பேரும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். திருமணத்திற்கான மரியாதை சட்டம் என்றழைக்கப்படும் அந்த மசோதாவுக்கு அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் வழங்கினால், உடனடியாக அது சட்டமாகிவிடும்.


LGBT வழக்கறிஞர்கள், Church of Jesus Christ of Latter-day Saints உள்பட பல்வேறு மத அமைப்புகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த 2015-ஆம் ஆண்டு, தேசிய அளவில் தன்பாலின திருமணம் செல்லும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.