USA Tariff: அதிபர் ட்ரம்பின் வரிகள் இந்தியாவை சீனாவிற்கு நெருக்கமாக்கியுள்ளதாக, அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ட்ரம்ப் மீது கடும் சாடல்
இந்தியாவிற்கான அதிபர் ட்ரம்பின் வர்த்தக கொள்கைகளை, அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சலைவன் கடுமையாக விமர்சித்துள்ளார். கடுமையான வரி விதிக்கும் நடவடிக்கைகள் அமெரிக்காவின் உலகளாவிய நிலையை சேதப்படுத்துவதாகவும், இந்தியாவை சீனாவிற்கு நெருக்கமாக தள்ளுவதாகவும் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் பேசுகையில், “சர்வதேச அளவில் அமெரிக்காவின் ப்ராண்ட் கழிவறையில் உள்ளது. இந்தியாவிற்கு எதிராக அவர் ஒரு பெரும் வர்த்தக தாக்குதலை நடத்தியுள்ளார். அமெரிக்காவிற்கு எதிராக தங்களை பாதுகாத்துக்கொள்ள சீனாவுடன் சேர்ந்து அமர இந்தியா தற்போது சிந்தித்துக்கொண்டுள்ளது” என பேசியுள்ளார்.
”சீர்குலைக்கும் நாடாக அமெரிக்கா”
மேலும், அமெரிக்காவின் நண்பர்களும், கூட்டாளிகளும் நமது நாட்டை தற்போது நம்பகமான கூட்டாளியாக பார்க்காமல், பெரிய சீர்குலைப்பாளராகவே பார்ப்பதாக சலைவன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், ”சீனா சர்வதேச அளவில் தன் மீதான நம்பகத்தன்மையை பெருக்கி வருகிறது. இந்தியா அதற்கு ஒரு சிறந்த உதாரணம். பல ஆண்டுகளாக, இந்தியா உடனான உறவுகளை இரு கட்சி அடிப்படையில் வலுப்படுத்த அமெரிக்கா உழைத்து வருகிறது, குறிப்பாக சீனாவை எதிர்கொள்ளும் சூழலில். ஆனால் ட்ரம்பின் வரிகள் இருநாடுகளுக்கு இடையேயான உறவை சீர்குலைத்து, இந்தியாவை சீனாவுடன் உட்கார கட்டாயப்படுத்தியுள்ளது”என்றும் சலைவன் சாடியுள்ளார்.
”அமெரிக்காவிற்கு சேதம் விளைவிக்கும்”
தொடர்ந்து பேசுகையில், “அமெரிக்கா மிகவும் ஆழமான மற்றும் நம்பகத்தன்மை மிக்க உறவை கட்டி எழுப்ப முயற்சித்து வருகிறோம். ஆனால், கூடுதல் வரி விதிப்பு காரணமாக சீனாவை நோக்கி இந்தியா நகர தொடங்கியுள்ளது. ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் நலன்களுக்கு பல ஆண்டுகளுக்கு சேதம் விளைவிக்கும்”என சலைன் எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் மீது வேறு எந்த நாடுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்கா விதித்த, 50 சதவிகித வரி அமலுக்கு வந்த சில நாட்களுக்கு பிறகு சலைவன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்த வரியால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வந்த இந்தியாவின் ஜவுளி, நகை, மெகானிக்கல் உதிரி பாகங்கள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பலர் வேலைவாய்ப்புகளை இழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
சீனாவுடன் நெருக்கம் காட்டும் இந்தியா:
அமெரிக்காவிற்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டு இருப்பதால், இந்தியாவின் ஏற்றுமதியை பன்முகப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், பல நாடுகள் உடனான வர்த்தகத்தை மேம்படுத்தவும் முனைப்பு காட்டி வருகிறது. தற்போது ஜப்பானில் உள்ள பிரதமர் மோடி, அங்கிருந்து சீனாவிற்கும் சென்று அதிபர் ஜி ஜிங் பிங்கை சந்திக்க உள்ளார். கல்வான் தாக்குதலுக்கு பிறகு இந்தியா - சீனா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறாமலேயே இருந்த நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள் சூழலை மாற்றி அமைத்துள்ளது.