அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான காலின் பவல் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உடல் உபாதைகள் காரணமாக இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 84. 2001 முதல் 2005 வரையிலான காலக்கட்டத்தில் ஜார்ஜ் புஷ் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் பவல். அந்தப் பொறுப்பில் இருந்த முதல் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டிருந்த நிலையிலும் பாதிப்பு ஏற்படுத்திய சிக்கல்கள் காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரிடமிருந்து அதிகாரபூர்வ செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
1937ல் பிறந்த காலின் பவல் அமெரிக்க ராணுவ ஜெனரலாகவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் அரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
காலின் பவல் மரணத்தை அடுத்து சமூக வலைத்தளங்களில் அவரது மறைவுக்கு பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதில் பிரபல ஃபார்மா நிறுவனமான பயோகானின் தலைவர் கிரண் மஜூம்தர் ஷா வெளியிட்டிருந்த இரங்கல் சர்ச்சைக்குள்ளானது.
காலின் பவல் தடுப்பூசி போட்டிருந்தவர் அவர் மரணம் அதிர்ச்சி அளிப்பதாகத் தனது ட்வீட்டில் அவர் பதிவிட்டிருந்தார். இதனை ரிட்வீட் செய்திருந்த நபர் ஒருவர் தடுப்பூசி போட்ட பிறகும் நிறைய பேர் இறப்பது பிரபல ஃபார்மா நிறுவனத்தை நிர்வாகிக்கும் கிரணுக்குத் தெரியாதா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் அளித்திருந்த கிரண், ‘தடுப்பூசி இறப்பு விகிதத்தை ஓரளவு குறைப்பதாகத்தான் டேட்டாக்கள் சொல்கின்றன.மேலும் பவல் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி போட்டிருந்தார்.அந்த தடுப்பூசி இறப்பு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியிருந்தது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு பக்கம், அவருக்கு ரத்தப் புற்றுநோய் இருந்ததாகவும் அதனால்தான் கொரோனாவுக்கு எதிராக அவர் உடல் ஒத்துழைக்கவில்லை என்றும் சிலர் பதிவிட்டிருந்தனர்.
காலின் பவலுக்குக் கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.