Just In




China Faces Heat: இது ரொம்ப ஓவர் பாஸ்.. சீனாவுக்கு வரலாறு காணாத வரி.? அமெரிக்கா அட்ராசிட்டி...
அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் உச்சமடைந்து வரும் நிலையில், சீன பொருட்கள் மீது வரலாறு காணாத வரியை விதித்துள்ளது ட்ரம்ப் நிர்வாகம்.

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சீனாவின் பதில் நடவடிக்கைக்கு எதிராக, அந்நாட்டின் இறக்குமதி மீது வரலாறு காணாத வரியை தற்போது விதித்துள்ளது ட்ரம்ப் நிர்வாகம். இதனால், உலகளாவிய பங்குச் சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
அமெரிக்கா - சீனா இடையே முற்றும் வர்த்தகப் போர்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பால், முதற்கட்டமாக சீனாவிற்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதற்கு பதிலடி கொடுத்த சீனா, அமெரிக்க பொருட்கள் அனைத்திற்கும் 34% வரியை விதித்தது. மேலும், பல அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் வர்த்தகம் செய்ய கட்டுப்பாடுகளையும், சில நிறுவனங்களுக்கு தடையையும் விதித்தது.
இதைத் தொடர்ந்து, சீனா அறிவித்த வரியை ஏப்ரல் 8-க்குள் திரும்பப்பெறாவிட்டால், அந்நாட்டிற்கு 50% கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும், அந்நாட்டுடனான பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டு, மற்ற நாடுகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் எனவும் ட்ரம்ப் எச்சரித்தார். ஆனாலும் விடாத சீனா, ட்ரம்ப் கூடுதல் வரியை விதித்தால், தாங்களும் பதில் வரி விதிப்போம் என எச்சரித்தது.
இதையடுத்து, சீனாவிற்கான வரியை 104%-ஆக உயர்த்தினார் ட்ரம்ப். இதற்கு பதிலடியாக, அமெரிக்காவிற்கான வரியை 84%-ஆக உயர்த்தியது சீனா. இதைத் தொடர்ந்து, பதிலுக்கு பதிலடி கொடுத்த ட்ரம்ப், சீன பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக உயர்த்தினார். அதோடு, மற்ற நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்ததுடன், சீனாவை தவிர மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கும் எனவும் அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்காவின் செயல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்றும், தாங்களும் வரியை மேலும் உயர்த்துவோம் என்றும் சீனா அறிவித்தது.
இதையடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 145 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து, சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரிகளை 125 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து சீன விமான நிறுவனங்கள் விமானங்களை வாங்கக் கூடாது என உத்தரவிட்டது சீன அரசு. மேலும், விமானம் தொடர்பான எந்த கருவிகளையும் வாங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் போர் உச்ச கட்டத்தை எட்டியது.
சீனாவிற்கு வரலாறு காணாத வரியை விதித்த அமெரிக்கா
பிரச்னைகள் இந்த அளவிற்கு இருந்த நிலையில், இன்று சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் 100 சதவீதம், அதாவது 245 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ட்ரம்ப். இது சீனாவிற்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை விடுத்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளை தங்கள் பக்கமாக இழுக்கும் முயற்சியில் சீன அதிபர் ஷி ஜின்பிங் வியட்நாம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில், அமெரிக்கா இந்த அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்துள்ளது.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு, உலகளாவிய பங்குச் சந்தைகளின் பெரும் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பங்குச் சந்தைகள் காலை முதல் ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பிற்குப் பிறகு, சரிவை சந்தித்து வருகிறது. இது முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு சீனா பணியப் போகிறதா, அல்லது இதற்கும் பதிலடி கொடுத்து, பங்குச் சந்தைகளில் பிரளயத்தை ஏற்படுத்தப் போகிறதா என்பதே தற்போது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.