அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கொலராடோவின் கொலராடோ ஸ்பிரிங்ஸில் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான இரவு விடுதியில் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர்.


துப்பாக்கிச்சூடு:


சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து, அந்த பகுதியை காவல்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய கொலராடோ ஸ்பிரிங்ஸ் காவல்துறை லெப்டினன்ட் பமீலா காஸ்ட்ரோ கூறுகையில், "கிளப் கியூவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர் ஒருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். 


 






காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நள்ளிரவுக்கு முன்பே போலீசாருக்கு முதல் தகவல் கிடைத்துவிட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பிறகு, கிளப்பில் இருந்த சந்தேக நபர் ஒருவரை அதிகாரிகள் கண்டறிந்தனர். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. துப்பாக்கிச் சூட்டில் என்ன வகையான துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்" என்றார்.


இதுகுறித்து கிளப் சார்பாக வெளியிடப்பட்ட பேஸ்புக் பதிவில், "எங்கள் சமூகத்தின் மீதான அர்த்தமற்ற தாக்குதலால் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளோம். துப்பாக்கியை கொண்டு தாக்கியவரை அடக்கி இந்த வெறுப்புத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வந்த வீரமிக்க வாடிக்கையாளர்களின் விரைவான எதிர்வினைகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்:


சமீபத்தில், வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டில், புளோரிடாவின் ஆர்லாண்டோவில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான இரவு விடுதியில் துப்பாக்கிதாரி ஒருவர் 49 பேரைக் கொலை செய்தார். பின்னர், அவர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்கவில் நடைபெற்ற மோசமான துப்பாக்கிச்சூடுகளில் இதுவும் ஒன்று.


இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர், தான் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, சமீபத்தில், பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக பயங்கர ஆயுதங்களை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.


அமெரிக்காவில் துப்பாக்கி சீர்திருத்தம் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது. இதேபோல, 1994 இல், ரைபிள்ஸ் மற்றும் சில உயர் திறன் துப்பாகிகளை பயன்படுத்த 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் பஃபேலோவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வெள்ளை இன வெறியர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.


அதே மாதம், உவால்டேவில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் 18 வயது இளைஞரால் 19 பள்ளி மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர். ஹைலேண்ட் பூங்காவில் ஜூலை 4 அணிவகுப்பில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.