அமெரிக்காவின் அதிபராக அதிக வயதில் பதவியேற்றவர் ஜோ பைடன். வயது முதிர்ச்சியின் காரணமாக, அவ்வப்போது  இவர், தவறுதலாக உளறுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த நிலையில், இவர், சீனாவை தவறுதலாக பாராட்டிய சம்பவம் அனைவருக்கும் வியப்பை தந்துள்ளது.


கனடா நாடாளுமன்றத்தில் சிரிப்பலை:


கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் குடியேற்ற கொள்கையை பாராட்டி பேசி கொண்டிருந்தபோது, கனடாவை சொல்வதற்கு பதிலாக சீனாவை சொன்னதால் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சிரிப்பலை எழுந்தது. "இன்று, நான் சீனாவை பாராட்டுகிறேன்" என கூறிய உடனேயே, சுதாரித்து கொண்ட பைடன் திருத்தி கனடா என திருத்தி கொண்டார்.


"மன்னிக்கவும், நான் கனடாவைப் பாராட்டுகிறேன். சீனாவைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை நீங்களே சொல்லலாம். நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை" என பைடன் தெரிவித்தார். எல்லை உள்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக அமெரிக்கா, சீன நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் சூழலில், இந்த சம்பவம் நடந்துள்ளது.


கனடாவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை வெளியேற்ற அந்நாடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க உதவ ஒப்பு கொண்டுள்ளது. இதற்கு பதில் நடவடிக்கையாக, லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வருடத்திற்கு மேலும் 15,000 குடியேற்றவாசிகளை ஏற்றுக்கொள்வதற்கு கனடா ஒப்புக்கொண்டது.


சீனாவுக்கு தவறுதலாக பாராட்டு:


இதை, பாராட்டி பேசும்போதுதான் கனடாவுக்கு பதில் சீனாவுக்கு தவறுதலாக பைடன் பாராட்டு தெரிவித்தார். இந்த வீடியோவை, ட்விட்டரில் பகிர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பைரன் டொனால்ட்ஸ், "தவறுதலாக பேசினாரா? அல்லது உள் விருப்பத்தை தெரிவித்துள்ளாரா? கனடா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பைடன் தற்செயலாக சீனாவை பாராட்டினார். அவரின் மனதில் சீனாதான் உள்ளது. ஏன் என்று குடியரசு கட்சிக்கு தெரியும்?" என பதிவிட்டுள்ளார்.


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்பின் மகனும் ட்ரம்ப் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவருமான எரிக் ட்ரம்ப், "அமெரிக்காவிற்கு என்ன ஒரு அவமானம்" என பைடனை  சாடியுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பைடன் ஒட்டாவாவுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து பைடன் முதல்முறையாக கனடா சென்றுள்ளார். 


இரு நாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு, பைடனும் ட்ரூடோவும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சர்வதேச ஒழுங்கிற்கு நீண்ட கால சவாலாக இருப்பது சீனா என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Sundar Pichai : ஊழியர்கள் அடுத்தடுத்து பணிநீக்கம்... சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதிய 1,400 ஊழியர்கள்...! என்ன விஷயம் தெரியுமா?