அமெரிக்க அதிபர் தேர்தலானது வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. 


சூடுபிடித்த அமெரிக்க அதிபர் தேர்தல்:


வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். பைடனை தவிர்த்து, ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். ஜனநாயக கட்சியை போல, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியான நிக்கி ஹேலி, உள்ளிட்டோர் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.


பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, அதிபர் தேர்தலில் இருந்து விலகியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. போட்டியில் இருந்து விலகியதை தொடர்ந்து டிரம்ப்-க்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் விவேக் ராமசாமி.


குடியரசு கட்சியில் டிரம்ப்-க்கு எதிராக தேர்தலில் குதித்தாலும் டிரம்ப் குறித்து விமர்சிக்காமல் இருந்து வந்தார் விவேக் ராமசாமி. தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், டிரம்புக்கு எதிரான வழக்குகளில் இருந்து அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். 


ஸ்கெட்ச் போட்ட விவேக் ராமசாமி:


அதேபோல, சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் வரை விவேக் ராமசாமியுடன் நட்புணர்வை பேணி வந்தார் டிரம்ப். குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரை தேர்வு நோக்கில் அயோவா மாகாணத்தில் நடத்தப்படவிருந்த விவாதத்துக்கு ஒரு நாள் முன்புதான், விவேக் ராமசாமியை டிரம்ப் லேசாக விமர்சித்தார்.


அயோவா மாகாணத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் டிரம்ப் முன்னிலை பெற்றதை அடுத்து, அதிபர் போட்டியில் இருந்து விவேக் ராமசாமி விலகினார். இப்படிப்பட்ட சூழலில், டிரம்பின் துணை அதிபர் வேட்பாளராக விவேக் ராமசாமி நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.


அல்வா கொடுத்த டிரம்ப்:


இந்த நிலையில், பிரச்சார கூட்டம் ஒன்றில் டிரம்புடன் மேடையை பகிர்ந்து கொண்ட விவேக் ராமசாமிக்கு டிரம்பின் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதுமட்டும் இன்றி, விவேக் ராமசாமியை பார்த்து துணை அதிபர், துணை அதிபர் என முழக்கம் எழுப்பியுள்ளனர்.   


பின்னர் பேசிய டிரம்ப், விவேக் ராமசாமியை தனது நண்பர் என்றும் உண்மையான தலைவர் என்றும் அறிமுகம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், "மிகவும் நல்லது, இல்லையா? அவர் ஒரு அற்புதமான நபர். அவரிடம் ஏதோன ஒன்று இருக்கிறது. அவர் நம்முடன் பணியாற்றப் போகிறார். அவர் நம்முடன் நீண்ட காலம் பணியாற்ற உள்ளார்" என்றார்.


 






டிரம்புக்கு விவேக் ராமசாமி ஆதரவு தெரிவித்த போதிலும், அவர் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட மாட்டார் என டிரம்பின் ஆலோசகர் ஜேசன் மில்லர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "டிரம்பின் துணை அதிபர் வேட்பாளராக ராமசாமி கருதப்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது. வாக்காளர்கள் அநேகமாக அவரை நிராகரித்துவிடலாம். விவேக் இல்லை என்பது உறுதி" என்றார்.