இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த விவரங்களை காணலாம்.

Continues below advertisement

“தயாராகிவரும் அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள்“

இஸ்ரேல், ஈரான் மீது நடத்திவரும் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வரும் நிலையில், அமெரிக்காவும் நேரடியாக தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ளது. இதற்காக, அமெரிக்காவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த வார கடைசியில் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், அதற்கான கட்டமைப்புகள் தயாராகி வருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, முக்கிய அதிகாரிகளும், துறைகளும் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கடந்த சில நாட்களாகவே, ஈரானை அச்சுறுத்தும் வகையிலேயே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசி வருகிறார். வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தாம் சிந்தித்துள்ளதாகவும், அந்த தருணம் வருவதற்கு ஒரு விநாடி முன்புதான் முடிவெடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இன்று ஈரான் மீதான தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தாக்குதல் நடத்தினாலும் நடத்துவேன், நடத்தாமலும் போவேன்“ என்று கூறியுள்ளார். இதனிடையே, அனைத்து விருப்பங்களும் மேசைமேல் உள்ளது என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தம் போட வேண்டும், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கடந்த வாரம் ட்ரம்ப் கூறி வந்த நிலையில், தற்போது அந்த நிலைப்பாடு மாறி, போரை நோக்கிய அவரது சிந்தனை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தாலும், அமெரிக்காவின் தாக்குதலை தவிர்க்க, ஈரான் ஏதாவது ஒரு வகையில் முயற்சி மேற்கொள்கிறதா என்று பார்க்கவே, சிறிது அவகாசத்தை ட்ரம்ப் வழங்கியுள்ளதாக தெரிகிறது. 

இதனிடையே, அணு ஆயுதத்தை தாங்கள் விரும்பவில்லை என்றும் பேச்சுவார்த்தைகளையே விரும்புவதாகவும், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி நேற்று தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்றார்போல், ஜெனிவாவில், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கடந்த செவ்வாயன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசியபோது, ஈரான் மீதான தாக்குதலை தொடருமாறு கூறிய ட்ரம்ப், தான் அதில் பங்கேற்பது குறித்து எந்த வாக்கையும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், ட்ரம்ப் ஈரானை தாக்குவாரா மாட்டாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இருந்தாலும், தாக்குதல் நடத்த தயாராகிவரும் அமெரிக்க அதிகாரிகள், ட்ரம்ப்பின் ஒரு வார்த்தைக்காகத் தான் காத்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.