ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி குடும்பத்துடன் லண்டனில் செட்டில் ஆகப்போகிறார் என்பது தான் இப்போதைய ஹாட் டாப்பிக்.


மிட் டே என்ற சர்வதேச ஊடகத்தில் தான் இந்தத் தகவல் முதலில் வெளியானது. லண்டனில் உள்ள பக்கிங்காம்ஷைரில் ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி வாங்கியதுதான் இந்த செய்தி வெளியாகக் காரணம்.


400,000 சதுர அடி அன்டிலியா; 300 ஏக்கர் ஸ்டோக் பார்க் எஸ்டேட்:


இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மிகவும் காஸ்ட்லியான வீடான மும்பை ஆல்ட்டா மௌண்ட் சாலையில் அமைந்திருக்கும்  400,000 சதுர அடி பரப்பளவிலான அன்டிலியாவில் வசிக்கிறார்.  


இப்படியிருக்க, முகேஷ் அம்பானி பிரிட்டன் நாட்டில் இருக்கும் பக்கிங்ஹாம்ஷைர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஸ்டோக் பார்க்-ஐ 592 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.


இதன் பிறகுதான்,  வருடத்தில் பாதி காலம் மும்பையிலும், பாதி காலம் லண்டனிலும் தங்க அம்பானி குடும்பத்தினர் முடிவு செய்ததாக தகவல் வெளியானது.


இந்நிலையில் அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இது தொடர்பான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.  அதில், லண்டனிலேயே அல்லது உலகின் எந்த மூலையிலேயோ குடியேறவோ, குடிபெயரவோ அம்பானிக்கும் அவரது  குடும்பத்திற்கும் எந்த திட்டமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


விளக்க அறிக்கை:


ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம் வாங்கியதன்  நோக்கம் அதனை உள்நாட்டு விதிமுறைகளோடு கோல்ஃப் மற்றும் விளையாட்டு ரெசார்ட்டாக மேம்படுத்துவதுதான். ரிலையன்ஸ்நிறுவனத்தில் வேகமாக வளரும் நுகர்வோர் வணிகத்துடன் தற்போது வாங்கியுள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டும் இணையும். அது இந்தியாவின் புகழ்பெற்ற விருந்தோம்பலின் தடத்தை உலகம் முழுக்க விரிவுபடுத்தும் என்று விளக்கப்பட்டுள்ளது.


ஸ்டோக் பார்க் எஸ்டேட்டின் சிறப்பு என்ன?


லண்டன் ஸ்டோக் பார்க் எஸ்டேட்டின் சிறப்பமசங்கள் இவை தான். இந்த இடத்தில் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் படமாக்கப்பட்டிருக்கிறது. வீட்டைச் சுற்றி ஏக்கர் கணக்கில் இருக்கும் கோல்ஃப் மைதானமும் அருகிலேயே ஓடும் ஆறும் இதன் தனிச்சிறப்பு. 49 படுக்கை அறைகள்; ஒரு மினி கிளினிக் உள்ளது.


அம்பானி குடும்பத்தினர் இந்த தீபாவளியை இங்குதான் கொண்டாடியுள்ளனர். இந்த சொத்தை அம்பானி குடும்பத்தார் விரும்ப காரணமே, அங்கு இருக்கும் வெளிவட்டார பகுதி தான். மும்பை வீடு ஓங்கி உயர்ந்து நிற்க. இந்த வீடோ, பரந்து விரிந்துள்ளது. கோல்ஃப் மைதானமும் அருகிலேயே ஓடும் ஆறும் அம்பானி குடும்பத்தினர் எதிர்பார்க்கும் தனிமையையும் ஸ்பேஸையும் கொடுத்துள்ளதாம்.


என்னதான் ஊடகங்களில் மறுக்கப்பட்டாலும் கூட பிரைவஸி காரணமாகவும் பிசினஸ் ரீதியாகவும் ஸ்டோக் பார்க் எஸ்டேட் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.