அடுத்த மாதம் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. புவிசார் அரசியலில் தெளிற்ற நிலைமை நிலவி வரும் இச்சூழலில், அனைவரின் கவனமும் பிரதமர் மோடியின் பக்கம் திரும்பியுள்ளது. 


செப்டம்பர் 15-16 தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிற்கு மோடி செல்லும் பட்சத்தில் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய ஆயத்த குழுக்கள் மத்திய ஆசிய நாடான  உஸ்பெகிஸ்தானுக்கு சென்றுள்ளன. ஆனால், இந்த பயணத்தை மேற்கொள்வதற்கான அரசியல் முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.


மோடியின் இந்த பயணம் உறுதியானால், சீன அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பை அவருக்கு உச்சிமாநாடு வழங்கும். உச்ச மாநாட்டிற்கு மோடி சென்றால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பையும் நிராகரிக்க முடியாது. இரு நாட்டு தலைவர்களும் நல்லுறவை பேணி வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை தொலைபேசியில் நான்கு முறை ஆலோசித்துள்ளனர்.


இரு தரப்புக்கும் இடையே பல சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்த போதிலும், இந்திய சீன எல்லை பகுதியான லடாக்கில் ராணுவ படைகளை முழுமையாக திரும்பபெறுவதில் சீனா தனது நிலைபாட்டை மாற்றி கொள்வதாக தெரியவில்லை.


இதன் காரணமாக, இந்திய சீன உறவு மந்தமான நிலையிலேயே உள்ளது. இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், உச்சிமாநாட்டிற்கு முன்னதாக சீனாவை உள்ளடக்கிய ரஷ்யாவால் நடத்தப்படும் 'வோஸ்டாக்' இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்திய இராணுவக் குழு கலந்து கொள்ள உள்ளது.


வரும் 2023ஆம் ஆண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை பதவி இந்தியாவுக்கு கிடைக்க உள்ள நிலையில், அடுத்த உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த பின்னணியில்தான் உச்ச மாநாடு நடைபெறுகிறது.


உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு தவிர, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, ஆப்கானிஸ்தான் ஸ்திரத்தன்மை மற்றும் இணைப்பு தளவாடங்கள் (INSTC மற்றும் சபஹார் துறைமுகம்),  ஆகியவை உச்சிமாநாட்டில் இந்தியாவின் முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கும்.


உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் உள்ளிட்ட மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களும் மோடியை சந்திக்க வாய்ப்புள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் புதிய உறுப்பினராக ஈரான் சேர்க்கப்பட உள்ள நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.


உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளவிலான கூட்டங்களில் கலந்து கொண்டனர். வரும் வாரங்களில் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ | Vinayagar Chaturthi 2022: ஐந்து கரத்தனை யானை முகத்தனை... விநாயகர் சதுர்த்தி வரலாறும் கொண்டாட்டங்களும்!