கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அவர்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.  


தொடர்ந்து ஒதுக்கப்படும் பெண்கள்:


அமெரிக்க ஆதரவு அரசு அமைவதற்கு முன்பு தலிபான்கள் ஆட்சி செய்தபோது இருந்த கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியது. விதிக்கப்பட்டு வரும் பிற்போக்கான விதிகள் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 


குறிப்பாக, பெண்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் மோசமான கட்டுப்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.


இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பெண்களை பணியில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என தலிபான் அரசு கட்டுப்பாடு விதித்தது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது.


பெண்களுக்கு உரிமைகளை மறுக்கும் தலிபான்கள்:


இப்படி, பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், பெண்களின் உரிமைகள் தங்களுக்கு முக்கியமல்ல என தலிபான் விளக்கம் அளித்தது. சமீபத்தில், ஆப்கானிஸ்தானில் இரண்டு முக்கிய நகரங்களில் கருத்தடை மருந்துகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அங்கு, கருத்தடை மருந்துகள் விற்கப்படுவதை தலிபான்கள் நிறுத்தினர். 


இந்த நிலையில், பெண்கள் அழகு நிலையங்களுக்கு தலிபான் தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் இயங்கி வரும் அழகு நிலையங்களை ஒரு மாதத்திற்குள் மூட வேண்டும் என தலிபான் அமைப்பு, இந்த மாத தொடக்கத்தில் தடாலடி அறிவிப்பை வெளியிட்டது. இஸ்லாம் தடைசெய்த சேவைகளை வழங்குவதாலும், திருமண விழாக்களில் மணமகன் குடும்பங்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதாலும் சலூன்களை சட்டவிரோதமாக்குவதாக தலிபான்கள் அறிவித்தனர்.


இது தொடர்பான அறிவிப்பை தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா வெளியிட்டிருந்தார். இதனால், அங்குள்ள பெண் தொழில்முனைவோர் பெரும் அளவில் பாதிக்கப்படுவார்கள் என சர்வதேச சமூகம் கவலையில் ஆழ்ந்துள்ளது.


அச்சம் காரணமாக, ஆப்கானிஸ்தானில் தலிபான் விதிக்கும் கட்டுபாடுகளுக்கு பொதுவாக பெரும் எதிர்ப்பு இருக்காது. ஆனால், இந்த முறை, தலிபான் தடைக்கு எதிராக தலைநகர் காபூலில் 12க்கும் மேற்பட்ட அழகுக்கலை கலைஞர்கள் மற்றும் ஒப்பனை கலைஞர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.


போராட்டக்காரர்களை கலைக்க தலிபான்கள் பெண்கள் மீது தண்ணீரை பீச்சு அடித்து, தாங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை வானத்தை நோக்கி சுட்டனர். இதுகுறித்து போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில், "நாங்கள் இங்கு நீதிக்காக வந்திருக்கிறோம். நாங்கள் வேலை, உணவு மற்றும் சுதந்திரத்தை விரும்புகிறோம்" என்றார்.