ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், காபூல்விமானநிலையத்தில் இருந்து பயணிகள் விமானங்களை இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்து நிறுவனமான டோலோ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 






ஆப்கானில் இருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் அந்நாட்டு மக்கள் குவிந்துள்ளனர். இதனால், காபுல் விமானநிலையத்தில் பதற்ற நிலை நிலவுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.  கூட்டம் கூட்டமாக காபுல் விமானநிலையத்தில் குவிந்துள்ள மக்கள், நாட்டைவிட்டு வெளியேற போராடி வருகின்றனர். கூட்ட நெரிசலால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெற்றுவிட கூடாது என்பதற்காக விமானங்கள் சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, விமானத்தின் மூலம் இந்தியா வந்த பெண் ஒருவர், "உலக நாடுகள் ஆஃப்கானிஸ்தானை கைவிட்டது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. தலிபான்கள் என்னுடைய நண்பர்களை விரைவில் கொலை செய்துவிடுவார்கள். அங்கு இனிமேல் பெண்களுக்கு எந்தவித உரிமையையும் இருக்காது" எனக் கூறியுள்ளார். மற்றொரு ஆஃப்கானிஸ்தான் பெண் ஆரிஃபா, "ஆஃப்கானிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. என்னால் நிம்மதியாக சாப்பிட்டு தூங்க முடியவில்லை. அங்கு தற்போது சுதந்திரம் இல்லை. எங்களுக்கு விரைவில் சுதந்திரம் வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 


ஏற்கனவே 129 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒரு விமானம் இந்தியாவில் இருந்து காபூல் செல்ல இருந்தது. இந்நிலையில், காபூல் விமானநிலையத்தில் விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.






இது குறித்து, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு ஏர் இந்தியா அளித்துள்ள தகவலின்படி, இரவு 8.30 மணிக்கு கிளம்ப இருந்த விமானம், இன்று மதியம் 12.30 மணிக்கு புறப்படுவதாக தெரிவித்திருந்தது. எனினும், காபூல் விமானநிலைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் இருந்து விமானம் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பது குறித்து மத்திய அரசு அவசர கூட்டத்தை டில்லியில் நடத்தி வருகிறது. அதில் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியர்களை மீட்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது. இதே போல ஐநா சார்பிலும் அவசர ஆலோசனை நடந்து வருகிறது.