இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் லீ சசி என்ற பெண் 7 மணி நேரம் உயிரிழந்தோரின் உடல்களுக்கு நடுவில் பதுங்கியிருந்து உயிர் பிழைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தொடங்கியது. பல ஆண்டு காலமாக இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது இஸ்ரேல் தனி நாடாக உருவானதில் இருந்து இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இஸ்ரேலுடன் பலமுறை போரிட்ட பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் காஸாவை ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சனிக்கிழமை போர் தொடங்கியது.  






இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் பதில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இரு நாட்டுக்கும் இடையே கடும் போர் நிலவி வரும் நிலையில் உலக நாடுகள் தாக்குதலின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1200 கடந்து உள்ளது. பார்க்கும் இடமெல்லாம் சடலங்கள், காசாவில் மட்டும் இதுவரை 830 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்,  இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லையர் ஹயாத் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் இது இல்லை.  நாங்கள் போருக்கு மத்தியில் உள்ளோம். தகுந்த பதிலடியை கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.  மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் இருக்கும் எனவும் தாக்குதலை தடுப்பதற்கு ஆலோசனை கூட்டமும் நடத்தினார்.   


இப்படியான சூழலில் நேற்று லீ சசி என்ற பெண் 7 மணி நேரம் உயிரிழந்தோரின் உடல்களுக்கு மத்தியில் பத்ங்கியிருந்து உயிர் தப்பியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லீ சசி மற்றும் அவருடன் சேர்ந்து 35 பேர் வெடிகுண்டு புகலிடம் ஒன்றில் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருக்க பதுங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் ஜமாஸ் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டனர். அப்போது அவர்களை நோக்கி சரமாரியாக ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்தினர். அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் பலரும் உயிரிழந்தனர். ஆனால் லீ சசி அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார். அவர் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நடுவில் சுமார் 7 மணி நேரம் மறைந்து இருந்துள்ளார்.


35 பேரில் வெறும் 10 பேர் மட்டுமே உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது தோழி நடாஷா ரகேல் கிர்த்சக் கட்மோனிடம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் எப்படி தப்பித்தார் என்றும் அதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றும் அனுப்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.