நம் அண்டை நாடான பாகிஸ்தான், தீவிரவாதத்திற்கு பெயர் போனதுதான் என்றாலும், அதற்காக இப்படியா என்று கேட்கும் அளவிற்கு ஒரு சம்பவம் அரங்கேறயுள்ளது. ஆம், வாட்ஸ்அப் குழுவிலிருந்து தன்னை நீக்கியதற்காக, அந்த குரூப் அட்மினையே ஒருவர் சுட்டுக்கொன்றுள்ளார்.
மக்கள் மனதுடன் ஒன்றிவிட்ட வாட்ஸ்அப்
இந்த காலத்தில், செல்போன் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது. அதிலும், வாட்ஸ்அப் இல்லாமல் இருப்போர் யாருமே இல்லை என கூறலாம். அந்த அளவிற்கு வாட்ஸ்அப் நம் மக்களோடு ஒன்றிவிட்டது. எந்த நிகழ்வானாலும், அதை வாட்ஸ்அப் குரூப்பில் ஷேர் செய்வது, ஸ்டேட்டஸில் போடுவது என, மக்கள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் ஒரு பெரும் மார்க்கமாக விளங்குகிறது வாட்ஸ்அப். இதில் பல விதமான குழுக்களும் உள்ளன. குடும்பம், சினிமா, விளையாட்டு, அலுவலகம், பெண்கள் குழு, பிசினஸ் குழுக்கள் என ஒவ்வொன்றிற்கும் ஒரு குழுவை அமைத்து, அதில் பலர் இணைந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றனர். வாட்ஸ்அப் குழுக்களில் சில நேரம் வாக்குவாதங்களும் நடைபெறுவதுண்டு. அதில் சில விபரீதங்களும் அரங்கேறுவதுண்டு. அப்படி ஒரு சம்பவம்தான், பாகிஸ்தானில் நடந்துள்ளது.
வாட்ஸ்அப் குரூப் அட்மினை சுட்டுக்கொன்ற நபர்
பாகிஸ்தானின் பெஷாவர் அருகே உள்ள ரெகி எனும் இடம் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ளது. இவ்விரு நாடுகளுமே தீவிரவாதத்திற்கு பெயர் போனவைதான். ரெகி பகுதியில் வசித்துவந்த அஷ்ஃபக்கான் என்பவர், ஒரு சமூக வாட்ஸ்அப் குழுவில் இருந்துள்ளார். அந்த குழுவில் அட்மினாக இருந்தவர் முஷ்டாக். இந்நிலையில், குழுவில் மெசேஜ் செய்யும்போது, இவ்விருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முஷ்டாக், அஷ்ஃபக்கானை குழுவை விட்டு நீக்கியுள்ளார்.
இதையடுத்து, இருவரும் விவகாரத்தை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் எனக் கூறிய அஷ்ஃபக், முஷ்டாக்கை ஒரு இடத்திற்கு பேச வருமாறு அழைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, சமாதானப் பேச்சுவாத்தை நடத்த தனது சகோதரருடன் முஷ்டாக் சென்றபோது, அஷ்ஃபக் தான் கொண்டுவந்த துப்பாக்கியை எடுத்து முஷ்டாக்கை சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே முஷ்டாக் இறந்துவிட்டார். இதையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார் அஷ்ஃபக்.
வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீக்கியதற்காகவே அவர் சுடப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் இருந்த முஷ்டாக்கின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், அஷ்ஃபக்கை போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அங்குள்ள சமூக ஊடகங்கள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இளைஞர்கள் பலரும் சர்வசாதாரணமாக துப்பாக்கி போன்ற உயிர்க்கொல்லி ஆயுதங்களுடன் அலைவதாகவும், சட்டமும் அவர்களை ஒன்றும் செய்வதில்லை என்றும் நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ரமலான் மாதத்தில் நடந்த இந்த சம்பவம் அவர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.