புகைபிடித்தல் ஒரு ஆபத்தான செயல், ஆனால் இன்னும் மக்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடவில்லை. எந்தவொரு வடிவத்திலும் புகையிலையின் நுகர்வு எல்லோருக்கும் தீங்கிழைக்கக்கூடியதுதான். ஆனாலும் உலகெங்கும் பலர் இதற்கு அடிமையாகி உயிரிழக்கின்றனர்.
ஹாங்காங் அரசாங்கத்தின் புதிய யுக்தி:
இப்போது, புகைப்பிடிப்பவர்களை நிறுத்தும் முயற்சியில் ஹாங்காங் அரசாங்கம் ஒரு புதிய முயற்சியை கொண்டு வந்துள்ளது. புகையிலை இல்லாத நகரத்தை உருவாக்கும் முயற்சியில் மக்கள் புகைப்பிடிப்பவர்களை உற்று நோக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
பேராசிரியர் லோ சுங்-மாவ் இது தொடர்பாக சட்டமன்ற கவுன்சிலின் சுகாதார சேவை குழு கூட்டத்தில் பேசியபோது "புகைப்பிடிப்பது நம் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். புகைப்பிடிக்க அனுமதி இல்லாத இடத்தில் புகைப்பிடிப்பவர்களை நாம் உற்று பார்க்கும் போது அவர்களுக்கு சங்கடமான சூழல் ஏற்படும். அதிகாரிகள் விரைந்து வருவதற்கு தாமதமானாலும் இந்த யுக்தி கைக்கொடுக்கும்" என கூறினார்.
மேலும் அவர் மக்களிடையே உரையாற்றியபோது, உணவகங்களில் யாரேனும் புகைப்பிடிக்க முயற்சித்தால் அங்கு இருக்கும் அனைவரும் அந்த நபரை உற்று நோக்கினால் சங்கடமான சூழல் ஏற்பட்டு புகைப்பிடிப்பதை தவிர்த்து விடுவார்கள் என தெரிவித்தார். இதன் மூலம் புகைப்பிடிக்கும் கலாச்சாரம் மெதுவாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் மாநிலச் சட்டத்தின் படி உணவகங்கள், அலுவலகங்கள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் புகைப்பிடித்தால் 22 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும்.
இந்தியாவில் அதிகரிக்கும் புகையிலை பழக்கம்:
இது ஒருபுறம் இருக்க, பிரபல தொற்றுநோய் நிபணர் புரோஹித் கூறுகையில், "அதிகமாக புகையிலை பயன்படுத்துபவர்களில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 26 கோடியே 80 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர். இந்த புகையிலை பயன்பாட்டால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகையிலை சுவாசிப்பதால் உயிரிழப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலும், ”ஹோட்டல், உணவகம், விமான நிலையம் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் புகைபிடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த பகுதிகளை ரத்து செய்து, பொது இடங்களில் 100 சதவீத தடைவிதிக்க வேண்டும். அப்போது தான் பாதிப்புகளை குறைக்க முடியும்” என்றார். புகையிலையில் ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் இருப்பதாகவும், அதில் குறைந்தது 80 ரசயானங்கள் புற்றுநோயை உண்டாக்குவதாக தெரிவித்தார். ”இந்த ரசாயனங்களால் 80 விதமான புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். பெண்களுக்கு கூட புகையிலை பழக்கத்தால், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஏற்படுகின்றன” என்றார். இதற்கிடையில், ஐரோப்பிய யூனியனில் மிகக் குறைந்த புகைப்பிடிக்கும் விகிதத்தைக் கொண்ட ஸ்வீடன், "smoke free" என்று அறிவிக்கும் நிலையில் உள்ளது.
புகைபிடிப்பதை நிறுத்தினால் ஆண்மைக் குறைவு, கருத்தரித்தல் பிரச்சினை, குறை பிரசவம், குறைந்த எடையில் குழந்தை பிறப்பது, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.