அமெரிக்காவின் சான்-பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்தியாவின் துணை தூதரகத்திற்கு கடந்த 2ம் தேதி, காலிஸ்தான் ஆதரவாளரகள் தீ வைத்துள்ளனர்.


தூதரகத்தின் மீது தாக்குதல்:


தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில், நள்ளிரவில் துணை தூதரக வளாகத்தில் எரிபொருளை ஊற்றிய ஒரு நபர் தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதனால் அதிவேகமாக பரவிய தீ, பல அடி உயரத்திற்கு கொழுந்துவிட்டு எரிய அப்பகுதியே புகைமண்டலமாக மாறியுள்ளது. கடந்த 5 மாதங்களில் இந்திய துணை தூதரகத்தின் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.





விரைந்து அணைக்கப்பட்ட தீ:


தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், ஊழியர்கள் யாருக்கும் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக உள்ளூர், மாநில மற்றும் மத்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைச் செயலுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


காரணம் என்ன?


காலிஸ்தான் புலிப்படை தலைவரும், பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜுன் மாதம் கொல்லப்பட்டார். இந்த கொலையில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஜெனரல் டாக்டர் டி.வி. நாகேந்திர பிரசாத் ஆகியோருக்கு பங்கு இருப்பதாக, காலிஸ்தான் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் தான் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


அமெரிக்கா கண்டனம்:


இதுதொடர்பாக பேசியுள்ள சான்பிரான்சிஸ்கோ மாகாண அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் “சனிக்கிழமையன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்ற நாசவேலை மற்றும் தீயிட்டு கொளுத்தப்பட்டதை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. அமெரிக்காவில் ராஜதந்திர வசதிகள் அல்லது வெளிநாட்டு தூதர்களுக்கு எதிரான வன்முறை அல்லது சூறையாடல் என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும்” என தெரிவித்துள்ளார்.


தொடரும் பதற்றம்:


சீக்கியர்களுக்கு தனி நாடு கோரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ துணை தூதரகத்தை போன்றே,  இங்கிலாந்தில் உள்ள லண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தையும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அதோடு, கனடாவில் சென்ற அணிவகுப்பு வாகனம் ஒன்றில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டது போன்று காட்சிப்படுத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  வரும் ஜூலை 8ஆம் தேதி டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள இந்திய தூதரகங்களை நோக்கி எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 


கடும் எதிர்வினையாற்றிய மத்திய அரசு:


இந்த சம்பவங்கள் தொடர்பாக அண்மையில் பேசி இருந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் “காலிஸ்தானிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற எங்களின் கூட்டு நாடுகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இது நம் உறவுகளை பாதிக்கும். இந்த சுவரொட்டி பிரச்னையை இந்த நாடுகளின் அரசாங்கத்திடம் எழுப்புவோம்” என குறிப்பிட்டார்.