பாகிஸ்தானில் லாகூர் நோக்கிச் சென்ற ரயிலின் எக்ஸிகியூட்டிவ் கோச்சில் கடந்த புதன்கிழமை மாலையில் தீ விபத்து ஏற்பட்ட, சம்பவத்தில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட ஏழு பேர் பலியாகியுள்ள சோகம் அந்நாட்டையே உலுக்கியது. 


ரயில் பெட்டியில் தீ


புதன்கிழமை இரவு கராச்சியிலிருந்து லாகூர் நோக்கிப் பயணித்த கராச்சி எக்ஸ்பிரஸ் ரயிலின் பிசினஸ் கிளாஸ் பெட்டியில் நள்ளிரவுக்குப் பின் தீ விபத்து ஏற்பட்டது. பாகிஸ்தான் ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் மக்சூத் குந்தி கூறுகையில், ரயிலின் மற்ற பகுதியிலிருந்து பிரிக்கப்பட்ட பெட்டியில் எப்படி தீப்பிடித்தது என்பதை அறிய முயற்சித்து வருகிறோம் என்றார். மேலும் சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும், உடனடியாக ரயில் தண்டோ மஸ்தி கான் நிலையம் அருகே நிறுத்தப்பட்டு, தீயணைப்புப் படைக்கு அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறினார்.



7 பேர் பலி


மேலும், "இந்த சம்பவத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று குழந்தைகளுடன் சேர்த்து ஏழாக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பெண்ணும் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரயில்வே அமைச்சகம் இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நள்ளிரவு 1.50 மணியளவில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 40 நிமிட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது," என்று மக்சூத் கூறினார். 


தொடர்புடைய செய்திகள்: வெள்ளிக்கிழமையில் பெண்கள் காலை 9 மணிக்கு பதில் 11 மணிக்கு வேலைக்கு வந்தால் போதும் - புதுச்சேர் முதல்வர் அறிவிப்பு


தனியாக பிரிக்கப்பட்டு மீண்டும் புறப்பட்டது


ரயில்வே அறிக்கை வெளியீட்டின்படி, நள்ளிரவு 12.30 மணியளவில் குளிரூட்டப்பட்ட பிசினஸ் கிளாஸ் பெட்டியில் தீ பற்றி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கிடைத்ததாக தெரிகிறது. அதன் பின்புதான் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெட்டி ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டு காலை 6.45 மணிக்கு லாகூருக்கு மீண்டும் பயணத்தை தொடங்கியதாக டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே அமைச்சர் கவாஜா சாத் ரபீக் உத்தரவிட்டுள்ளதாகவும், மத்திய அரசின் ரயில்வே இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தொடர்ச்சியாக நடக்கும் ரயில் விபத்துகளுக்கு காரணம்?


நவீன காலத்திற்கு ஏற்ப செயல்பட அதிகாரிகள் தவறியதாலும், மேம்படுத்தப்பட வேண்டிய பாதை அமைப்பு காரணமாகவும் பாகிஸ்தானில் அடிக்கடி ரயில் விபத்துகள் நடக்கின்றன. பாகிஸ்தானில், சில நடைமுறையைத் தடைசெய்யும் விதிகள் இருந்தபோதிலும், ஏழைப் பயணிகள் பெரும்பாலும் தங்கள் உணவை சமைக்க தங்கள் சொந்த சிறிய எரிவாயு அடுப்புகளை ரயில்களில் கொண்டு வருகிறார்கள். நெரிசல் மிகுந்த ரயில்களில் பாதுகாப்பு விதிமுறைகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. 2019 ஆம் ஆண்டில், பஞ்சாப் மாகாணத்தில் ரயிலில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில் 74 பயணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.